டில்லு குறூப் ரௌடிகளிற்கு யாழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, March 27, 2019

டில்லு குறூப் ரௌடிகளிற்கு யாழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

டில்லு குறூப் என்ற பெயரில் இயங்கிய பயங்கர ரௌடிக்கும்பலை சேர்ந்த மூவரிற்கு 2 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவர் ஒருவரைத் தாக்கிய குற்றம் தொடர்பாக நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அன்ரனி சாமி பீற்றர் போல் தீர்ப்பளித்தார்.

குற்றவாளிகள் மூவரினதும் தண்டனைக் காலத்தை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதிவான், பாதிகப்பட்டவருக்கு 60 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துமாறும் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடம் வீதியில் 2012ஆம் ஆண்டு குடும்பத் தலைவர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சத்தியநாதன் அன்ரனிஸ் அல்லது டில்லு, அரவிந்தன் அலெக்ஸ் மற்றும் ராதா ஆகிய மூவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் குற்றப்பகர்வுப் பத்திரம் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விளக்கம் நிறைவடைந்த நிலையில் சாட்சிகளின் அடிப்படையில் எதிரிகள் மூவரையும் குற்றவாளிகள் என நீதிமன்று தீர்ப்பளித்தது.

குற்றவாளிகள் மூவருக்கும் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அவர்களின் தண்டனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அத்துடன், பாதிக்கப்பட்டவருக்கு குற்றவாளிகள் மூவரும் தலா 20 ஆயிரம் ரூபா வீதம் 60 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக வழங்கவேண்டும் என்று நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் தண்டனைத் தீர்ப்பளித்தார்.

இதேவேளை, 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாழ்ப்பாணம் மடம் வீதியில் குடும்பத்தலைவர் ஒருவரை வாளால் வெட்டிய குற்றச்சாட்டில் ஐந்து ஆண்டுகளாக இடம்பெற்ற வழக்கு விசார ணையை தொடர்ந்து டில்லு குழுவைச் சேர்ந்த 8 பேருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தண்டனை தீர்ப்பளித்திருந்தது.

இதன்படி சத்தியநாதன் அன்ரனிஸ் அல்லது டில்லு, அரவிந்தன் அலெக்ஸ் மற்றும் சிவேந்திரன் கலிஸ்ரன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் விஜயரத்தினம் ஜனுசன், ஜெகதீஸ்வரன் டிரெக்ஸ்காந்தன், அருந்தவராஜ் செந்தூரன், பெனடிக்ட் வெஸ்லி ஏபிரகாம், தேவராசா ஹரிசன் ஆகியோருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், பாதிக்கப்பட்டவருக்கு 8 குற்றவாளிகளும் 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் அதனைச் செலுத்தத் தவறின் ஓர் ஆண்டுகால சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்திருந்தார்.

நீதிவான் நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து குற்றவாளிகள் 8 பேர் சார்பிலும் அவர்களது சட்டத்தரணிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தனர். எனினும் நீதிவான் நீதிமன்றின் தீர்ப்பை உறுதி செய்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அப்போதைய நீதிபதி, மேன்முறையீட்டாளர்கள் தண்டப் பணம் செலுத்தவேண்டும் எனவும் கட்டளையிட்டமை குறிப்பிடத்தக்கது.