சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய பந்து ஜெனிவாவுக்குச் செல்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது.
கொழும்பில் நேற்று சிறிலங்கா பொதுஜன முன்னணி நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியானது.
அண்மையில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தின் பக்க அமர்வு ஒன்றில் பங்கேற்க, அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த சிவில் அமைப்பு ஒன்று கேணல் ரத்னபிரிய பந்துவுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால், கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம், அவருக்கு நுழைவிசைவு வழங்க மறுத்து விட்டது.
பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், டலஸ் அழகப் பெரும மற்றும் றோகித அபேகுணவர்த்தன ஆகியோர், இதுபற்றி கருத்து வெளியிட்ட போது, பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகாவுக்கு அமெரிக்கா நுழைவிசைவு மறுத்ததன் அடிப்படையில் கேணல் ரத்னபிரிய பந்துவுக்கும் நுழைவிசைவு மறுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
வன்னியில் சிவில் பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் ரத்னபிரிய பந்து, கடந்த ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் இராணுவத்தில் இருந்து விலகியிருந்தார்.
வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமை தாங்கத் தயாராக இருப்பதாக அண்மையில் அவர் ஒரு தொலைக்காட்சி செவ்வியின் போது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.