ஒவ்வொரு வீட்டிலும் 2 மின்குமிழ்கள் அணைக்கப்பட வேண்டும்: வருகிறது புதிய நடைமுறை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, March 27, 2019

ஒவ்வொரு வீட்டிலும் 2 மின்குமிழ்கள் அணைக்கப்பட வேண்டும்: வருகிறது புதிய நடைமுறை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெரக்கடியை அடுத்து, மின்பாவனையை சிக்கனமாக்கும் பல அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுக்கவுள்ளது. இதன்படி, எதிர்வரும் 3 மாதங்களுக்கு சகல மின்பாவனையாளர்களும் தமது வீடுகளில் 2 மின்குமிழ்களை அணைப்பதுடன், அரச பொது நிறுவனங்களில் மின்பாவனையை 10 சதவீதத்தால் குறைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க மின்சக்தி அமைச்சுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையைக் கருத்திற் கொண்டு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த யோசனைக்கே, அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 3 மாதங்களுக்கு வீடுகளில் இரண்டு மின் விளக்குகள் அணைக்கப்பட வேண்டும், அரச அலுவலகங்கள், மத வழிபாட்டு ஆலயங்கள், வர்த்தக நிலையங்களில் மின் பாவனையை 10 சதவீதத்தினால் குறைத்தல், அநாவசியமான மின் விளக்குகளை அணைத்தல் வேண்டும் என்ற புதிய நடைமுறையை மின்சக்தி அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது.

அத்துடன், வழமையாக வீதி மின் விளக்குகளை அணைக்கும் நேரத்திற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக அவற்றை அணைக்கும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.