நிலம் பட்ட பாடுதனை
புலம்பெயருக்கு கூவிநின்ற
பூவரசின் கிளை முறிந்தது !!!
கலவரத்தின் சீற்றங்களை
குரல்வழியே மொழிபெயர்த்த
கண்ணகிமைந்தன் கதைமுடிந்தது !!!
போர்வீரர் பெருமைகளையும்
மாவீரர் தியாகங்களையும்
பாருக்குரைத்த பறை ஓய்ந்தது !!!
அடிமைவாழ்வை உடைத்தெறி
அண்ணன் வழி கடைப்பிடியென்ற
ஆணழகனின் ஆத்மா விடைபெற்றது !!!
தெய்வீக கீதங்களையும்
மெய்வீர சாகசங்களையும்
நெய்தநூல் நெருப்பை நெருங்கியது !!!
களப்போரின் கண்ணியத்தையும்
கரிகாலனின் கட்டுக்கோப்பையும்
கலைப்பதிவாக்கிய கானம் அடங்கியது !!!
எப்படி உணர்வு கொந்தளித்தது
எவ்வாறு இப்படிப் பாடமுடிந்ததென்று
எதிரிகள் வியந்த குரல் மெளனித்தது !!!
ஆயிரமாயிரம் பாடல்கள் பாடிய
கோடி ரசிகர்களின் கொண்டாட்ட நாயகன்
நாடியை இழந்து விட்டான் !!!
தமிழீழ வரலாறு புனையும்போது
தவறியும் விடுபடமுடியா தங்கக்குரலோன்
அமைதியாய் உறங்குகின்றான் !!!
கரிகாலன் மட்டும் இருந்திருந்தால்
காலன் வருகையை நிறுத்திவைத்து காப்பாற்றியிருப்பான்……
காலத்தை என்ன சொல்வது ???
மண்ணை நேசித்தது மட்டுமின்றி
மண்ணிற்காக இரு மாவீரர்களைத் தந்த
மரியாதைக்குரிய எம்மவன்….
புங்கைமண்ணின் புகழ் வரிசையில்
எங்கள் அண்ணன் எப்போதும் உயரத்தில்..
சென்று வா என் செல்லமே !!!
ஈழ தேசத்தின் இணையற்ற குரல்……
பாடிப் பறந்தது எங்கள் உறவுக்குயில் !!!!
வீர வணக்கம் !!!!
-ஐங்கரன் –
Monday, March 18, 2019
New