தனது ஆன்மீக வழிகாட்டலால் தமிழர் உலகத்தை செம்மைப்படுத்தி வரும் அருட்திரு பங்காரு அடிகளாரின் அவதாரத்துக்கு அகவை 75 நிறைவை வரவேற்று ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து மண்ணில் சொலதூண் கெர்லபிங்கெனில் மண்டபம் நிறைந்த மக்களுடன் (27.06.2015) சனியன்று நடந்தேறிய பவளவிழா காலை 10 மணிக்கே களைகட்ட தொடங்கி இருந்தது .குறிப்பாக சக்தி வழிபாடு சுவிஸ் பேர்ண் ,சூரிச்,லாசவோ ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்களின் செவ்வாடை இயக்கத்தினாரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது பக்தர்கள் ,பார்வையாளர்கள் ,மற்றும் சிறப்பாக வருகை தந்திருந்த சுவிஸ் நாட்டு மக்களையும் வெகுவாகக் கவர்ந்திருந்ததோடு சக்தி வழிபாட்டின் மகிமையையும் ஆன்மீக தெளிவையும் பெறக் காரணமாக அமைந்திருந்தது . இந்த வழிபாட்டு நிகழ்வுகள் மதியம் வரை நடைபெற்றதை தொடர்ந்து மதிய போசனம் வழங்கப்பட்டது.
இவற்றை தொடர்ந்து சுமார் 2 மணியளவில் முறைப்படி பவளவிழா நிகழ்வுகள் ஆரம்பாகின . ஆரம்பமே காண்போரை பரவசப்படுத்துமாறு சிறப்பான வரவேற்பு வேளையாக இருந்தது . விழாவுக்கு பிரதம விருந்தினர்களாக சமூகமளித்திருந்த சுவிஸ்பேர்ன் மாநில சோசலிசக்கட்சியின் முக்கிய முன்னணி தலைவர்கள் சந்தனமாலைகள் அணிவிக்கப்பட்டு நுழைவாசலில் இருந்து விழா மண்டபத்தினுள்ளே அழைத்து வரப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். மன்றின் நடுவே அருள்மிகு சக்திக்கொடியை சோசலிசக்கட்சியின் பேனர் மாநிலத்தலைவியான உர்சுலா அம்மையார் ஏற்றி வைத்தார் .வரவேற்புரை வரவேற்பு நடனத்தையடுத்து சக்தி வழிபாட்டின் வரலாறும் பெருமையும் மற்றும் அம்மாவின் ஆன்மீக வழிகாட்டலின் சிறப்பு என்பன பற்றி உன்னத விளக்கப் பேருரைகளை தமிழ் ஜெர்மன்,பிரெஞ்சு மொழிகளின் வழங்கி இருந்தமை சுவிஸ் நாட்டு மக்களையும் எமது இளையதலைமுறையினரையும் ஐயம் திரிபற சக்தி வழிபாட்டின் ஆற்றலை விளங்கிக் கொள்ள அமைந்த அற்புதமான ஒரு நிகழ்வாகும் .அத்தோடு பவளவிழாவையொட்டி சிறப்பு அஞ்சல்தலை வெளியீடும் நடைபெற்றது .
தமிழகத்தில் இருந்து விசேசமாக வருகை தந்திருந்த வீரத்தமிழர் முன்னணி இயக்கத்தை சேர்ந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களின் சிறப்புரை மக்களை பெரிதும் கவர்ந்திருந்தது.பிரான்சில் இருந்து கவிஞர் தா .பாலகணேசனின் அருமையான சொற்பொழிவும் இடம்பெற்றிருந்தது .காண்போரை கொள்ளை கொள்ளும் வண்ணம்ஏற்பாடு செய்யபடிருந்த கலைநிகழ்ச்சிகளில் வில்லுப்பாட்டும் . இளம் சந்ததியினரின் ஆளுகையில் நிகழ்ந்த எங்கள்வழி என்னும் நாடகமும் குறிப்பிடத்தக்கது .இறுதியாககவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதையே பாடலாக மற்றும் வீழமாட்டோம் போன்ற இசைப்பேழைகளின் இசையமைப்பாளர் இனியவனின் இசையில் சக்தி செல்வரத்தினம் சுரேஷ் பாடிய இசைத்தட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இயந்திரமயமான ஐரோப்பிய வாழ்க்கை ஓட்டத்தின் மத்தியில் அம்மாவின் பவளவிழாவினை எங்கும்செம்மயமாக எல்லா உள்ளங்களிலும் அம்மாவின் அருள்மழையால் நிறைந்திருக்கும் வண்ணம் சீரிய முறையில் நெறிப்படுத்தி இருந்த செவ்வாடை இயக்கத்தினரை பாராட்டியாக வேண்டும்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி