சிறிலங்கா பொதுத் தேர்தல் களம் கொதிநிலையில் உள்ளது. யனவரி 8 ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷ குழுமத்தின் குடும்ப, ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பெறப்பட்ட வெற்றி பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் தென்னிலங்கையில் ஏற்பட்டு உள்ள நிலையில், 2001 ஆம் ஆண்டு முதல் தமிழர் தாயகப் பகுதியில் தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவாக இருந்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்று பலரும் களத்தில் குதித்துள்ள நிலையில், புலம் பெயர் தமிழ் மக்கள் இந்தத் தேர்தல் தொடர்பில் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கண்டறிய கதிரவன் குழுமம் மேற்கொண்ட முயற்சியின் வெளிப்பாடே இந்தக் காணொளித் தொகுப்பு.
இங்கே பொதுமக்களால் கூறப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் கதிரவன் குழுமம் தனது முடிவைத் தெரிவிக்க விரும்பவில்லை. ஜனநாயகத்தில் மக்கள் கருத்துக்கு எப்போதும் மதிப்பளிக்கப்பட வேண்டும். புலம்பெயர் மக்களின் கருத்துக்கள் இலங்கைத் தேர்தலில் நேரடிச் செல்வாக்குச் செலுத்தாது என்பது உண்மையே ஆயினும், தமிழ் மக்களின் மனோநிலை தாயகத்திலும் கிட்டத்தட்ட இவ்வாறே இருக்கும் என ஊகிக்க முடியும்.
தேர்தலில் யார் வெல்வது தோற்பது என்பதற்கும் அப்பால் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்தப் பதிவு