இருண்டகாலத்தின் பதுங்குழி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 14, 2019

இருண்டகாலத்தின் பதுங்குழி


சொங்களற்றவர்களின் அசையா முகங்களில்
சங்கீதம் பாடி ஆடுகின்றன ஈக்கள்
இரவுக்கும் பகலுக்கும் இடையில்
மாபெரும் யுத்தப்படை ஒன்று
என் கிராமத்தை கடந்து போயிருக்கையில்
காணவில்லை விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை
சாட்சிகளற்றவர்களின் நிலத்தில்
கைது செய்யப்பட்ட குழந்தை ஒன்றை
ஏற்றுக்கொள்ளவும் யாருமில்லை
மீண்டுமொரு இருண்ட காலத்தில்
பதுங்குகின்றனர் குழந்தைகள்
வானத்தில் விமானங்கள் இல்லை
எத்திசைகளிலிருந்தும் செல்கள் வரவில்லை
வானத்தையும் திசைகளையும் கண்டு
அஞ்சுகின்றன குழந்தைகள்
இப்போது எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை
பீரங்கிகள் எதுவும் இல்லை
விமானங்களும் இல்லை
போர்க்களங்களைத் துறந்துவிட்டோம்
பாசறைகள் யாவற்றையும் மூடிவிட்டோம்
ஆனாலும் ஏனோ சுற்றிவளைக்கப்ட்டிருக்கிறோம்
ஒரு போர் நடந்துகொண்டிருக்கிறது.
இராணுவம் ரோந்து செல்லும் வீதியில்
யாரோ ஒருவன்
சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டான்
யாரோ கதவை தட்டிக்கொண்டிருக்கும்
வீட்டுக்குள் வசித்துக் கொண்டிருக்கிறேன்
யாரோ ஒருவன் துப்பாக்கியோடு
துரத்திக் கொண்டிருக்கும் தெருவில்
சைக்கிளை மிதித்துக் கொண்டிருக்கிறேன்
எல்லோருமே தேடப்படும் நகரத்தில்
எனக்கொரு பதுங்குகுழி எங்கிருக்கிறது?
குழந்தைகள் பார்த்தில்லை ஒளிமிகுந்தகாலத்தை
என்னிடம் இருப்பதுவோ
இருண்டுபோன பதுங்குகுழிகள்.


தீபச்செல்வன்