ஒவ்வொரு ஆண்டும்
வந்து போகும்
நாமும்
உங்கள் இல்லம்
வருவோம்.
அன்று மட்டும்தான்
எங்கள் உள்ளங்களை
தூய்மை செய்கிற பேறு
கிடைக்கிறது.
சுமைகள் இறக்கி
இளைப்பாற முடிகிறது.
குறைகள் சொல்லி
ஒப்புக்கொடுக்க முடிகிறது.
ஆகா! எத்தினை அழகு!
பிரபஞ்சத்தில்
இன்று மட்டும்தான்
மனங்கள்
பூக்களை அதிகமாக
நேசிக்கின்றன.
நாரோடும் வேரோடும்
விரல்கள் உறவு
வைத்துக்கொள்கின்றன.
ஆகமொத்தத்தில்
இன்றுதான்
பூக்களின் பிறப்புக்கே
அர்த்தம் கிடைத்திருக்கிறது.
இன்றே தீபங்கள் கூடி
நன்றே சூரியன் செய்து
இருளகற்றுகின்றன
நம் உள்ளத்திலும்.
உயிர்கள் உருகும்
நினைவில் ஒலிக்கும்
பாவின் கனதியை
உணரும் செவிகள்.
கண்ணீரில் கரைந்து
கசிந்து உருகிப்போகிறது
மனசெல்லாம்.
நிலையில்லா வாழ்வில்
ஏதோ ஒன்றில் லயித்து
இறுகப்பற்றி பயணிக்க
இங்கு மட்டும்தான்
கற்க முடியும்.
இதைவிடவும் ஊருக்கென்ன,
உலகுக்கே இல்லை பள்ளி.
இங்கு வந்த பின்புதான்
கலங்கிய குட்டைகள்
தெளிந்த நீரோடைகளாக
முரடுகளும் முக்கனிகளாக
உருப்பெறுகின்றன.
குனிந்தவனும்
இங்கு வந்துதான்
நிமிர்வு பெறுகிறான்.
வைரம் எடுக்கிறான்.
வரம் தரும் உங்கள்
வாசலில் இன்று நம்
கால்களில்லை.
அந்த மண்ணிலிருந்து
பெயர்க்கப்பட்டு விட்டோம்.
உங்களால் மட்டுமே
யாதுமாகி அங்கு
வீற்றிருக்க முடிகிறது.
எங்கும் வியாபிக்கவும்
முடிகிறது.
இம்முறையும்
உங்கள் இல்லம்
தரிசிக்கும் பாக்கியம்
நமக்கு கிட்டவில்லை.
அங்கு உங்கள்
இருப்பிடங்கள்
இல்லையாமே
என்பதற்காக அல்ல.
மனசுக்குள் ஏதோ
குற்றமாகக்குடைகிறது.
தேசத்துக்குப்பதில்
தேகம் நேசித்தோம்.
பொறுப்புக்குப்பதில்
பொருள் தேடினோம்.
சுபீட்சத்துக்குப்பதில்
சுகம் நாடினோம்.
எஞ்சியுள்ள நம்
மானுடப்பிறவிக்கு
மதிப்புதான் என்ன
இந்த வையகத்தில்?
***
இலங்கை முல்லைத்தீவிலிருந்து…
தாயக கவிஞர்
அ.ஈழம் சேகுவேரா