மாவீரர் புகழ் பாடிப்பரவுவோம்! – கவிஞர், த. மதி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

மாவீரர் புகழ் பாடிப்பரவுவோம்! – கவிஞர், த. மதி


மாவீரர் புகழ் பாடிப்பரவுவோம் 27.11.2017

கார்த்திகை இருபத்தியேழு எங்கள்
காவல் தெய்வங்களின் வீடு நோக்கி
கூப்பிய கைகளுடன் பூக்களும்
மாலைகளுமாய்

ஆவல் பொங்க ஓடி வரும்
சொந்தங்கள் காவிய நாயகர் காலடி
தொட்டு கண்ணீர் மழை சிந்தி உயிர்
மேவிய அன்பினைப்

பொழிந்திடும் காட்சி
கல் நெஞ்சைக்கூடக் கரைத்து நல்
நெஞ்சம் ஆக்குமன்றோ!

அப்படி ஓர் அபூர்வ சக்தி படைத்த
உன்னதமானவர் எங்கள் மாவீரர்கள்
தலைவன் சொற்படி நடந்து அன்னை
மண் மீட்க சன்னதமாடிச்
சரித்திரமானவரின் ஓரு திருநாளே
மாவீரர் நாள்!

தமக்கென வாழாத் தன்மை
உடையோர் பிறர்க்கே என்றும்
நன்மை படைப்போர்!

இவர் போன்றோரால் தான் உலகம்
இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது!

துன்பம் தீரும் வரை சோம்பிக்
கிடவார் – பிறர் இன்பம்
பெற்று இனிதே வாழ என்றும் மறவார்!



தமிழன்னையின் விழி நீர் துடைக்க
உயிரும் உடலும் கொடுத்தார்!
தமிழீழத்தைத் தவிர உலகம் தரினும்
கொள்ளார்!

ஆரியப்படை கடந்த
நெடுஞ்செழியனையும் விஞ்சிய
சிங்கள கூலிப்படைகளையும் அந்நிய
ஆக்கிரமிப்புப் படைகளையும் கடந்த

பிரபாகரனின்; சீரிய வளர்ப்பில்
நேரிய வழியில் களமாடி வீழ்ந்த காலமும் ஞாலமும்

மறக்கவொண்ணாச் சீலர்கள் எங்கள்

மாவீரர்கள்!

தாயின் மனம் கூட ஓர் இடத்தில்
திரியுமென என் தாய்த்தமிழ்
சொல்கிறது! பிரபாகரன் எனும்
பெருந்தாயின் மனம் என்றுமே
திரிந்ததில்லை!

எல்லோரையும் ஒரே சமமாக
எண்ணும்! மண்ணும் மக்களும்
விடுதலை பெறும் வரை

உலகத் தமிழினம் தலைவன்
வழியிலே நடக்கும் இது திண்ணம்!
வீரர்களையெல்லாம் மாவீரராய்ப்
படைத்துக் காட்டிய எங்கள்

பெருந்தாயின் வழியில் நடந்தவர்கள்
மாவீரர்கள்!

கொடுத்து வாழ்வதில் தான்
சிறப்புண்டு உயிரைக் கொடுத்துத்
தான் வாழாது

தன்னினம் வாழ விழுப்புண்பட்டு
இறப்புண்டு போன மறவர் புகழ்
பெறக்கண்டு வாழ்த்தும் இவ்வுலகு!

பழந்தமிழ் வீரம் அடுபோர்க்
களங்களில் காட்டி

இழந்த எம் ஈழத்தை மீண்டும்
வழங்கிட இளம் வயதினில் உயிரை
இழந்திட்ட இனமான மறவர் தமை
உளம் தனில் வைத்துப் போற்றுவோம்!

பெரும் படைகளைத் தகர்த்து, வரும்
தடைகளை உடைத்து, மடை திறந்த
வெள்ளமெனப் பாய்ந்து முன் சென்று
உயிர்க்கொடை தனைப் புரிந்து
விடுதலை விடை தனைத் திறந்து
வீறுநடை போட்ட

பெருவீரம் தனை தன்மானத் தமிழரின்
ஒவ்வொரு நெஞ்சிலும் அடை
காப்போம்!

சொல்லுக்கு முன் செயல் கொண்ட
மெய்யான தலைவனின் பொய்க்காத
வீரம் தனை உள்வாங்கி, மெய் வீரம்
நிலை நாட்டிய அரும் பெரும் தீரம்

செய்து காட்டிய மாவீரரே!

தலை சாய்த்து வணங்குகிறோம்

போற்றவும் வியக்கவும் வல்லது போர்க்களம்

ஆடாத புறநானூற்று மகளிர் வீரம்!

நேருக்கு நேர் நின்று போர்களமாடிய புதிய

புறநானூற்று மங்கையர் வேர் கொண்ட நிலம்

தமிழீழமென எண்டிசையும் அறியும்! பண்டிசையோடு

பாரறிந்த தமிழீழம் மீட்கப் போராடி வீழ்ந்த

மாவீரர் புகழ் பாடிப்பரவுவோம்

கவிஞர், த. மதி