2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
பரீட்சை பெறுபேறுகளை நிர்ணயிக்கப்பட்ட திகதியில் வெளியிடல் மற்றும் காலதாமதம் இன்றி உரிய காலப்பகுதிக்குள் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் கல்வி அமைச்சர் கடந்த வருடங்களின் போது விசேட அவதானம் செலுத்தியிருந்தார்.
இதன் பிரகாரம் பாடசாலை கல்வி கட்டமைப்புடன் சார்ந்த பரீட்சை பெறுபேறுகளை காலதாமதம் இன்றி நிர்ணயிக்கப்பட்ட திகதியொன்றில் வெளியிடுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பரீட்சைகள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன் பிரதிபலனாக ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதியும், க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம் 28 ஆம் திகதியும், உயர்தர பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதியும் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கு பாடசாலை மட்டத்தில் 422,850 பேரும், வெளிவாரியாக 233,791 பேரும் விண்ணப்பம் செய்திருந்தனர். இதன்படி மொத்தமாக 656,641 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள 4661 பரீட்சை நிலையங்களில் சாதாரண தர பரீட்சை இடம்பெற்றது.
கடந்த வருடங்களை போன்று சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இணையளத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதன்படி www.doenets.lk என்ற இணையளத்தின் ஊடாக பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.