தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் அரசு ஏமாற்றுகிறது! கூட்டமைப்யை ஏன் ஆதரவளிக்கிறது? அனந்தி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, March 27, 2019

தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் அரசு ஏமாற்றுகிறது! கூட்டமைப்யை ஏன் ஆதரவளிக்கிறது? அனந்தி

அரசாங்கம் ஏமாற்றுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவார்களாயின் அந்த அரசுக்கான ஆதரவை ஏன் தொடர்ந்தும் வழங்க வேண்டுமென முன்னாள் வட.மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக்கொள்ள கூட்டமைப்பினர் தயாராக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “காணாமற்போனோர் மட்டுமல்லாது பொறுப்புக்கள் உட்பட அனைத்திலும் தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் இலங்கை அரசு ஏமாற்றி வருகிறது.

இவ்வாறு அரசாங்கம் ஏமாற்றி வருவதனையே நாங்கள் தொடர்ச்சியாகவே சொல்லிவருகின்ற போதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கான ஆதரவை வழங்கிக்கொண்டுதான் வருகின்றது.

இவ்வாறு அரசிற்கு சகல விதத்திலும் ஆதரவை வழங்கி வருவது மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லாத இந்த வரவு செலவுத் திட்டத்திற்கும் ஆதரவை வழங்கியிருக்கிறது. அதே போன்று மூன்றாவது தடவையாகவும் வரவு செலவுத் திட்டத்திற்கு அரசாங்கத்துக்கு வழங்க போகின்றது.

ஏனெனில் நிபந்தனையற்ற ஆதரவையே இந்த அரசிற்கு கூட்டமைப்பு வழங்கி வருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே அரசிற்காக சகல சந்தர்ப்பங்களிலும் தங்களால் ஆன ஆதரவை வழங்கி வருகின்றார்கள். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் இப்போது தேர்தல்கள் வரவுள்ளதால் இந்த அரசாங்கம் ஏமாற்றி வருவதாக கூட்டமைப்பினர் கூறி வருகின்றனர். இனி தேர்தல் காலம் என்பதால் தமிழ் மக்களையும் மாற்றுவதற்காக இப்போது முயற்சிக்கின்றனர்.

ஆகையினால் அரசாங்கம் பொய் கூறுகின்றதோ அல்லது ஏமாற்றுகின்றதோ என்று உண்மையில் கூட்டமைப்பினர் கூறுவார்களாயின் இந்த அரசுக்குக வழங்கி வருகின்ற ஆதரவை விலக்கிக் கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றனரா என்று கேட்கின்றோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.