உலகத்தையே துணைக்கழைத்து விடுதலை உணர்வுகளையும்
உள்ளங்களையும் சிதைத்து விட்டோமெனக் கொக்கரிக்கும் பகையே!
ஊருலகெல்லாம் உனக்குத் தோள் தந்து காத்தது
எம் மக்களே எமக்குத் துணை நின்றார்கள் விடுதலைச் சாகரத்தில்
எதிர்காலச் சந்ததி நீந்தி விளையாடச் சாகத் துணிந்தார்கள்
செத்து மடிந்தார்கள் வரலாறாய்ப் போனார்கள்.
ஏ! பகையே! முள்ளிவாய்க்காலில் எமை வீழ்த்தி விட்டதாய்ப்
பறையறைகின்றாய் பிறகேன் ஐயம் கொள்கிறாய்?ஓ… முற்றுமுழுதாய்
வீழ்த்தவில்லையென்றா? நீ முற்றுமுழுதாய் வீழ்த்தவுமில்லை நாம் வீழப் போவதுமில்லை! சிறு மழைத்துளி கண்டால் உயிர்த்துளி கொள்ளும் அறுகெனப் படர்வோம் அகிலம் வியக்க மீண்டும் சுடர்வோம்!
இதுவே பேருண்மை! முனை மழுங்காத, விடுதலை முனை
மழுங்காதிருக்கும் முள்ளிவாய்க்கால்! அறிவாயுதம் கொண்டு மென்மேலும் முனை தீட்டுவோம் ராஜதந்திரங்களால் விடுதலைத் தீயினை மூட்டுவோம்!
நெஞ்சுறுதியுடனும் வல்லமையுடனும் வெல்வோம் என எதிர் கொண்டோம் அஞ்சி ஓடவுமில்லை! கெஞ்சி ஏங்கவுமில்லை! வெஞ்சினம் கொண்டு போரிட்டோம்
குஞ்சுகள்; பிஞ்சுகளென மூன்று லெட்சம் மக்கள் எமைச் சூழ்ந்து நின்றார்.
வஞ்சக நெஞ்சம் கொண்ட உலக வல்லாதிக்தின் கைப்பிள்ளைகளான
நயவஞ்சகரே! நஞ்சினைக் அள்ளிக் கொட்டி எமை நாசம் செய்தீர்
முனை மழுங்கிப் போய் விடுவோம் என்றா நினைத்தாய்? விடுதலை
கிட்டும் வரை முனைப்புடன் ஆண்டாண்டு காலமாய் உழைப்போம்.
அன்று எமைப் பார்த்து நீ திகைப்பாய்!
முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்து விட்டோம் அள்ளி அரவணைக்க யாருமே இல்லையென துள்ளிக் கூத்தாடிய நரிகளே!கேளுங்கள் வெள்ளி முளைத்தது விடிகாலைக் கதிர்கள் அரவணைத்தது முள்ளிவாய்க்கால் கடற்காற்று சஞ்சீவி மருந்தாக உடல் தழுவியது!
வீழ்ந்து கிடப்பது தமிழினத்தின் பண்பல்ல, வீழ்ந்த பின்னும்
எழுந்து நிற்கிறோம் விடுதலை ஒன்றையே மூச்செனக் கொண்டவர் நாம் முனை மழுங்கிப் போகவில்லை முள்ளிவாய்க்கால். தலைமுறை வாழத் தலைவனிட்ட கட்டளை முடிப்போம். தாரக மந்திரம் படிப்போம்
பழந்தமிழன் பண்டாரவன்னியன் அரசு கொண்டு வாழ்ந்த நிலம்
காலனித்துவ வாதிகளால் இழந்தோம்! மீண்டும் இளந்தமிழன்
பிரபாகரன் இடைக்கால அரசுசோச்சிய நிலம். உலகத்தின்
சதியால் சிங்களனிடம் இழந்தோம்! உளம் தனிலே
வெறி கொண்டு இழந்த நிலம் மீட்டெடுக்க களந்தனிலே
போராடி மறவர்கள் வீழ்ந்த நிலம். இழந்த உயிர் கொஞ்சமல்ல
அத்தனையும் உரமாகும் தமிழீழம் உருவாகும்
நெற்றி வியர்வையும் குருதிப் புனலும் ஊற்றி
வளர்த்த விடுதலைப்பயிர் முற்றி வரும் வேளையில்
உலகக் குள்ளநரிக் கூட்டங்களின் கரங்கள் பற்றி
சுற்றி வளைத்தெம்மை முற்றுகையிட்டீர்! உறுதி தளராது
இறுதி வரை போரிட்டோம். வற்றி வரண்டு போவோம்
என்றா நினைத்தாய்? உறைந்து மறைந்து விடாதெம் வீரம்
உணர்வுகள் புடைக்க அறிவூற்றெனப் பொங்கும் இளையோர்
உலகத் திசயெங்கும் எழுவார்!
mathi
புதிதாகச் செய்யப்பட்ட நாசகார ஆயுதங்கள்
அத்தனையும் பரீட்சித்துப் பார்க்க முள்ளிவாய்க்கால்
முற்றமும் தமிழினத்தின் தலையுமா கிடைத்தது
உலக வல்லாதிக்கமே? குற்றம் ஏதும் அறியாத
எம் சுற்றத்தை குண்டு மழையால் சிதைத்தீர்!
கொடுங்கோலர் கொட்டம் அடக்கி விடுதலைக்
கொற்றம் அமைக்கும் வரை கூண்டுக்குள் அடைபடாது
இளைய விடுதலைச் சிறுத்தைகள்!
எட்டுக் கோடி தமிழன் அருகிருந்தும் தட்டிக் கேட்க எழவில்லை!
என் செய்வோம் இனமானத்தமிழன் தமிழகத்தை ஆளவில்லை.
அவர்களுக்கும் அங்கு தனித்தமிழ் நாடில்லை! உதடு வரைக்கும் தான்
தமிழும் தமிழினமும் உள்ளத்து உணர்வினிலே கடுகளவும் தானில்லை
தானாடா விட்டாலும் தன்தசை ஆடும் என்பார்கள் ஆடலையே!
பாரதி சொன்னது போல இவர்களெல்லாம்; நாட்டத்தில்
கொள்ளாத நாளில் மறக்கும் தலைவர்கள்!
உலகத் தமிழினத்துக் கொரு நாடு அது அழகுத் தமிழ் பேசும்
தமிழீழத் திருநாடு! ஆளுக்கொரு கை தந்தால் உலக வரைபடத்தில்
தமிழீழம் அமையும்! ஏழாண்டு போச்சுது எட்டாண்டும்
வரப் போகுதென்று புலம்பாமல் பாராண்ட தமிழினமே
சொந்த நாட்டை மீட்டெடுக்கப் போராடு!
புலத்திலிருந்து நிலம் நோக்கிப் பயணிக்கும்
ஈழத்தமிழ் உறவுகளே! சமுக்காள வீதிகளையும்
சம்சுங் கைத்தொலை பேசிகளையும், வீட்டுக்கு நாலு
குதியுந்துகளையும் கண்டு சுதந்திரம் கிடைத்து
விட்டதென மயங்காதீர்கள்! இதற்காகவா செருக்களம்
மீதிலே பல்லாயிரம் உறவுகளை அள்ளிக் கொடுத்தோம்
தமிழீழம் எங்கள் தாய்நாடு அதை மீட்கத் தயங்காதீர்கள்
வீரத்திருமக்களும் வீறுகொண்ட வீரர்களின்
மாவீரமும் நின்று புயலெனச் சுழன்றடித்த
முள்ளிவாய்க்கால் தாய் மண்ணே! கோரப்
பற்களுடன் வந்த சிங்களப் பெரும் பூதங்கள்
உனை விழுங்கி ஏப்பமிட்டாலும், முனை மழுங்காத
முள்ளிவாய்க்கால் திருமண்ணே! இன்னும் விடுதலை
முனை மழுங்காதிருக்கும் முள்ளிவாய்க்கால் பெருமண்ணே!
ஒரு நாள் விடுதலை அடைவது நிச்சயமே.
தானைத்தலைவன் பிரபாகரன் காட்டிய இலட்சிய வழியுண்டு;
வளர்தலைமுறை பன்மொழி ஆற்றல்மிகு பல்லாயிரம்
இளந்தளிருண்டு; என் தமிழ்த்தாய் தந்த இலக்கிய
இலக்கணச் செம்மொழியுண்டு; வளம் கொழிக்கும்
வளமான ஐவகை நிலமுண்டு; கிழக்கை நோக்கி
எழும் செங்கதிரவன் போல் இலக்கை நோக்கி
ஒன்றாய் எழு உலகத்தமிழினமே விடிவுண்டு.
-கவிஞர் மதி-