முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னான ஈழத் தமிழர்களின் வடுக்கள் நிறைந்த வாழ்வினைப் படம்பிடித்துக்காட்டும் இக் கவிதைப் படையலின் வரிகள் களத்திலும் புலத்திலும் ஒர் கவன ஈர்ப்பை உண்டாக்கவேண்டும் என்பதனைக் கருத்தில் கொண்டு எம்மால் ஒழுங்கு செய்யப்பட்டது.
வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும், அவலச் சாவைத் தழுவிக் கொண்ட ஈழத் தமிழர்களையும் நினைவுகூரும் முகமாக ‘முனை மழுங்கா முள்ளிவாய்க்கால்” என்ற தலைப்பில் ஓர் கவிதைப் படையலை; வெளியீடு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். ‘சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து தமிழர்களை அடக்கி விட்டோம்” என்று கொக்கரிக்கும் சிங்கள இனவாத இறுமாப்பை தோலுரிக்கும் இப்படையல் முள்ளிவாய்க்காலோடு தமிழர் வீரம் முடிந்துவிடவில்லை என்பதனைத் துல்லியமாக காட்சிப்படுத்துகின்றது.
புறநானூறு கண்ட தமிழர் வீரம் மழுங்காத முனையோடு எழுச்சி பெறும் என்பதனைச் சர்வதேச நாடுகளும் அறிந்திடவேண்டும் என்கின்ற புதிய கண்ணோட்டத்தில் அனைத்துக் கவிஞர்களும் மிக அற்புதமாகக் கவி வடித்துள்ளார்கள்.
உலகத் தமிழர்களின் தாயகத் தேடலுக்கு ஓர் புதிய உத்வேகத்தைக் தரும் முள்ளிவாய்க்கால் நினைவுதினமான இம்மாதம் 18 ஆம் திகதியைக் கறுப்பு நாளாகப் பார்ப்பதோடு மட்டும் அல்லாது இதுவே தமிழரின் எழுச்சிக்கு வித்திட்ட நாளாகவும் அமையவேண்டும் என்பதனைச் சாதனையில் காட்டிச் சரித்திரம் படைக்கின்றது இக் கவிதைப் படையல்.