ஊடகர்களின் சமூகப் பொறுப்பு! சண் தவராஜா - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 21, 2019

ஊடகர்களின் சமூகப் பொறுப்பு! சண் தவராஜா

சமூகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகங்கள் இன்றைய மனித வாழ்வியலில் இன்றியமையாதவையாக விளங்கி வருகின்றன. பல்வேறு காலகட்டங்களிலும் பல்வேறு விதமான வடிவங்களில் மனித வாழ்வியலில் பங்கேற்று வந்த இந்த ஊடகங்கள் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத் தளங்கள் என பரிணாமம் கண்டுள்ளன. முறையான ஊடகங்களுக்கு அப்பால் சமூக ஊடகங்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் முகநூல், ‘வட்ஸ் அப், டுவிட்டர், யூ டியூப்” போன்றவை வரையறைகளை உடைத்து உண்மைகளை, தணிக்கைகள் எதுவுமின்றி உடனடியாகவே உலகின் கண்கள் முன் நிறுத்தி வருகின்றன.
ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஊடகங்கள் தொடர்பிலான பரிச்சயம் படித்தவர்களுக்கானதாக மாத்திரமே நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால், இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னான அரசியல் சூழல் காரணமாக பாமரர்களும் ஊடகங்களை நாடி செய்திகளை அறிந்து கொள்ளும் ஆர்வம் மிக்கவர்களாக மாற வேண்டிய நிலை உருவானது. 80 களில் எழுச்சி பெற்ற தமிழ்த் தேசியம். அதன் விளைவான யுத்த சூழல் என்பவை காரணமாக ஊடகங்கள் தமிழ் மக்களின் வாழ்வில் உயிருக்கு நிகரானவையாக மாறிப் போயிருந்தன. ஒரு காலகட்டத்தில்; மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை ஊடகங்களின் வழிகாட்டல்களைக் கொண்டே தீர்மானிப்பவர்களாக இருந்தனர் என்பதை மறுப்பதற்கில்லை.
யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த ஆறு ஆண்டுகளில் ஊடகங்கள் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த அதீத ஆர்வம் வெகுவாகக் குறைந்து போயுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. அது மட்டுமன்றி தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சமூக ஊடகங்களின் ஆக்கிரமிப்பும் எல்லை கடந்து சென்றிருக்கின்றது. யுத்தச் செய்திகளை மாத்திரமே நம்பி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த பல ஊடகங்கள் ஜனநாயகச் சூழலில் செய்திகளுக்காக அல்லாடிக் கொண்டிருப்பதையும் சில வேளைகளில் செய்திப் பஞ்சம் காரணமாக தரக் குறைவான செய்திகளை அளிக்கை செய்து கொண்டிருப்பதையும் காண முடிகின்றது.
யுத்த காலகட்டத்தில் கதாநாயக அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட ஊடகவியலாளர்களின் கவர்ச்சியால் உந்தப்பட்டு செய்தியாளர்களாக உருவான பல இளம் ஊடகவியலாளர்கள் தற்போதைய சூழலில் செய்திகளுக்காக அலைந்து திரிவதை அவதானிக்க முடிகின்றது. பணம் பண்ணும் நோக்கில் பலர் அரச சார்பற்ற நிறுவனங்களில் வாக்குறுதிகளில் மயங்கி தம்மை மறந்து செயற்பட்டு வருவதையும் காண முடிகின்றது.
அண்மையில் யாழ் மாவட்ட ஊடகவியலாளர்கள் சிலர் கொழும்பு வந்து அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்திதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தமையை வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும். புதிய ஆட்சியில் பிராந்திய செய்தியாளர்கள் அரசுத் தலைவரைச் சந்தித்து நிழற்படம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு ஊடக சுதந்திரம் உள்ளதாக வெளியே தெரியப் படுத்தப்பட இது உதவியதாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், இது தொடர்பில் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் மேற்கொண்டிருந்த பதிவு பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவருடைய பதிவு கீழே உள்ளது. இதனை வாசிக்கும் போது அவரின் ஆதங்கம் உங்களுக்கு நிச்சயம் புரியும் என நினைக்கிறேன்.
வந்தார்கள்;கண்டார்கள்;போனார்கள்இ என்பதாக திடீரென வடக்கில் இருந்து தமிழ் ஊடக நண்பர்கள் (படத்தில் பார்த்தால் நிறைய பேர்) கொழும்பு வந்து போனதாக ஒருநாள் செய்திகளில் கண்டேன். அதற்கு முதல்நாள் முற்பகல் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பில்இ சில மணி நேர இடைவெளியில்இ அன்று மாலையே இலங்கை மன்ற கல்லூரியில்இ வடமாகாண ஊடகவிலாளருடன் ஒரு சந்திப்பு இருக்கின்றதுஇ வாருங்கள் என்று சொல்லப்பட்டது.
அன்று மாலைஇ ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இருந்ததால்இ என்னால் அதில் கலந்துக்கொள்ள முடியவில்லை.
அவ்வளவுதான். இது ஏதோ ஒருநாளுக்குள் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட பயணமோ? அப்படியானால் அது ஏன்? ஏனப்பா இந்த அரைகுறை அவசர விஜயம்?
இதற்கு முன் இங்கே இருந்து ஒரு ஊடக குழுவினர் அங்கே வந்தார்கள். என்னையும் யாழ் வரும்படி ஒரு ஏற்பாட்டாளர் அழைத்தார். வேறு வேலை இருந்ததால் நான் வரவில்லை. ஆனால்இ என்னால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கினேன்.
நாட்டின் ஜனாதிபதிஇ பிரதமர்இ ஊடக அமைச்சர் ஆகியோரை சந்தித்தது மிக நல்ல விடயம். ஆனால்இ இவை மாத்திரம் போதும் என்று நினைத்து விட்டீர்களோ? தலைநகர மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ கட்சியாக ஒரு அமைச்சரவை அமைச்சர்இ அதுவும் சகவாழ்வுஇ மொழி அமுலாக்கல் துறை அமைச்சர்இ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்இ மாகாணசபை உறுப்பினர்கள் இருவர்இ மாநகரசபை உறுப்பினர்கள் ஆறு பேர் என்போரை கொண்ட நமது கட்சி இங்கே இருக்கிறது. கட்சி அலுவலகம்இ அமைச்சரவை அலுவலகம்இ எங்களது தொலைபேசி இலக்கங்கள்இ முகநூல் உள்பெட்டிகள்இ நிலையான விலாசங்கள்இ என முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவும்இ குறுஞ்செய்தி அனுப்பவும் எக்கச்சக்கமாக இருக்கின்றன. ஊடகவியாளர்களுக்கு இவை தெரியாமல் இருக்கவும் முடியாது.
தலைநகரம் வந்த உங்களை உடன்பிறப்புகளாக மகிழ்வுடன்இ அழைத்துஇ விருந்தோம்பல் செய்துஇ அனுப்பி வைக்க எம்மால் முடியாது என எண்ணி விட்டீர்களோ? முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தால்இ எத்தனையோ அரசியல்இ சமூகஇ கலாச்சாரஇ ஊடக தலைப்புகளில் எவ்வளவோ விஷயங்களை மனம் விட்டு கலந்து உரையாடிஇ இருக்கலாமே? பல சிக்கல்களுக்கு விடை தேடியும் இருக்கலாமே?
அன்று கடந்த ஆட்சியில் அங்கே நீங்கள் கொல்லப்பட்ட போதுஇ தாக்கப்பட்ட போதுஇ கடத்தப்பட்ட போதுஇ இங்கே இருந்துஇ அங்கே வந்துஇ என்னுடன் இணைந்து போராடிஇ வடக்கு ஊடக அடக்குமுறைபற்றி கொழும்பில் ஆர்ப்பரித்து பேசியஇ சிறிதுங்கஇ விக்கிரமபாகு ஆகிய சிங்கள முற்போக்காளர்களையாவது சந்தித்தீர்களா என்றால் அதுவும் இல்லை. சிறிதுங்கஇ விக்கிரமபாகு ஆகியோரிடம் விசாரித்த போதுஇ இல்லையேஇ அப்படியா வந்தார்களா? எப்போ? ஏன் எங்களை இவர்கள் சந்திக்கவில்லை என்று இருவரும் என்னிடம் வருத்தப்பட்டார்கள்.
ஆகஇ ஜனாதிபதிஇ பிரதமர் ஆகியோரை குசலம் விசாரிக்க வந்தீர்களோ? அதற்கு மொழிபெயர்ப்பாவது கிடைத்ததா? அல்லது அவர்களுடன் ‘போடோ சூட்’ செய்து படம்பிடிக்கதான் கொழும்பு வந்தீர்களோ? பிடித்த படங்களையாவது பத்திரமாக வீடுகளில் மாட்டி வைத்துக்கொள்ளுங்கள். நாளை உங்கள் வீடுகளுக்கு ஆமிக்காரன் வந்தால் எடுத்து காட்டலாம்.
ஒரு சில ஊடகர்கள் இவ்வாறு நடந்து கொண்டாலும், சமூக அக்கறை கொண்ட ஊடகவியலாளர்கள் எம் மத்தியில் அறவே இல்லை எனக் கூறிவிட முடியாது. ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும், ஊடக சுதந்திரத்துக்கு ஆதரவாகவும் பல்வேறு தளங்களில் செயற்பட்டு வரும் அத்தகையோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும் முனைப்புக் காட்டி வரவே செய்கின்றனர். அவர்கள் ‘வட்ஸ் அப்” மற்றும் ‘வைபர்” குழுக்களை உருவாக்கித் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். சில இலகுவான விடயங்களில் உடனடித் தீர்வுகளை எட்டும் அவர்கள் பல விடயங்களில் விவாதங்களை உருவாக்குவதன் ஊடாக விழிப்புணர்வை உருவாக்கி தீர்வுகளை எட்ட முயற்சி செய்து வருகின்றனர். அவர்களின் முயற்சி பாராட்டப்பட்டே ஆக வேண்டும்.
அது மாத்திரமன்றி, பொதுவில் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள், நெருக்கடிகள் தொடர்பில் பரவலான விழிப்புணர்வை உருவாக்கவும், ஜனநாயகத்தின் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதற்காக பல்வேறு வேலைத் திட்டங்களை உருவாக்கவும் அவர்கள் முயன்று வருகின்றார்கள். அத்தோடு, மக்கள் பிரதிநிதிகள் தம்மைத் தெரிவு செய்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களாகவும், அவர்களின் கோரிக்கைகளைச் செவிமடுப்பவர்களாகவும் விளங்கும் வகையில் ஒரு இணைப்புப் பாலமாகச் செயற்படவும் ஊடகர்கள் முயன்று வருகின்றார்கள்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் தற்காலச் சூழலில் முறையான வழிகாட்டல் இன்றி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. சரியான வழிகாட்டல் ஒன்று உருவாகும் வரை அதனை வழங்க வேண்டிய பொறுப்பு ஊடகர்களின் தோள்களிலேயே இருக்கிறது. தமது பொறுப்பை உணர்ந்து அவர்கள் சரியாக நடந்து கொண்டால் மக்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் எனலாம்.