முதலிலேயே சொல்லிவிடுகிறேன், அந்த அரசாங்கத்தில் ஒரு சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன! ஆனால், நிர்வாகமோ ஐரோப்பிய நாடுகளைப் போலத்தான் இருந்தது! லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊழல் என்றாலே என்னவென்று தெரியாது! ஏழை பணக்காரன் பேதம் இல்லை! வேலை கொடுக்கும் நிறுவனங்கள் கண் துடைப்புக்கு இண்டெர்வியூ நடத்திவிட்டு, காசு வாங்கிக்கொண்டு அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலை கொடுக்கும் இழி நிலை இல்லை!
அரசியல் கட்சிகளின் காமெடி கிடையாது! கொழும்பில் இருப்பது போல, ஒரு கட்சி, அதற்கு தொண்டர்கள், சில குண்டர்கள், வன்முறைகள், பஸ் கொழுத்துறது, காரை எரிக்கிறது, ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சுக்கிட்டு சாவுறது எதுவுமே கிடையாது! ஐரோப்பா போலவே ரொம்ப அமைதியா இருக்கும்! குனிந்துவிட்டோம் ஆயினும், நிமிர்ந்தோம் என்பதும் வரலாறு
மேலும் விடுதலைப்புலிகளின் காவல் துறை பற்றி சொல்லியே ஆகவேண்டும்! கருநீல ஜீன்ஸும் + மெல்லிய நீலத்தில் ஷர்ட்டும் அணியும் காவல் துறை உறுப்பினர்கள் நிச்சயமாக ஃபிரெஞ்சுப் போலீசையோ, லண்டன் போலீஸையோ நினைவு படுத்துவார்கள்! இவர்களிடம் இருக்கும் ஸ்மார்ட், கம்பீரம் அவர்களிடமும் இருக்கும்! அப்புறம் தமிழீழ போலீசுக்கு லஞ்சம் கொடுப்பீங்க? அந்தப் பேச்சே இருக்காது! ஒரு வேளை நீங்கள் ஒரு தப்புப் பண்ணிவிட்டு, அதனை விசாரிக்க வரும் போலிஸ் அதிகாரிக்கு ஒரு ஐம்பது ரூபாவை நீங்கள் எடுத்து நீட்டினீர்கள் என்றால், அவ்வளவுதான், அடுத்தநாள் எங்கோ ஒரு இருட்டறைக்குள் இருந்து முழிச்சு முழிச்சுப் பார்ப்பீர்கள்!
இன்று மேற்கு நாடுகள் செல்வந்த நாடுகளாக இருப்பதற்கு முக்கிய காரணமே சுய உற்பத்தியும், டெக்ஸ் ( Tax ) அறவிடப்படுகின்றமையுமே ஆகும்! வன்னியிலும் டெக்ஸ் முறைமை இருந்தது! கள்ளக்கணக்கு காட்டுறது, பணத்தை பதுக்கி வைத்து கறுப்பு பணமாக்குறது இதெல்லாம் கனவிலும் நடக்காது! சட்டம் ஒழுங்கு அப்படி இருந்தது!
இங்கு ஃபிரெஞ்சுக்காரர்கள் தூய ஃபிரெஞ்சில் தான் பேசுவார்கள்! அதற்குள் ஆங்கிலத்தைச் செருகி, புதுவிதமான ஒரு பாஷை பேசுவதில்லை! இங்கு தூய ஃபிரெஞ்சு என்றால், அங்கு தூய தமிழ்! எல்லாவிதமான பொறியியல் சாதனங்கள், இலத்திரனியல் சாதனங்கள் அனைத்துக்கும் தமிழைக் கண்டுபிடித்து நல்ல தமிழில் தான் கதைப்பார்கள்! வன்னி மக்கள் பேசும் பேச்சை வைத்தே, அவர் வன்னிதான் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்! வன்னிமக்கள் தமது தேவைகளின் நிமிர்த்தம் அரச கட்டுப்பாடுப் பகுதிக்குள் வரும்போது, அவர்களது மொழியை, இங்கிருப்பவர்கள் பரிகசித்த சம்பவங்களும் நிறையவே உண்டு!
கலைகள் :
வன்னியிலே கலைத்துறை உச்சம் பெற்றிருந்தது என்பதை ஆணித்தரமாகக் கூறுவேன்! எத்தனை நூல்கள்? எத்தனை பாடல்கள்? எத்தனை கவிஞர்கள்? பாடலாசிரியர்கள்? இசையமைப்பாளர்கள்! அனைவருமே மக்களால் மிகவும் ரசிக்கப்படுபவர்கள்! ஒரு கிளிநொச்சி பாடலாசிரியர் பாடல் எழுதுவார்! அதற்கு கிளிநொச்சி இசையமைப்பாளர் மெட்டுப் போடுவார்! பாடலை பாலசுப்ரமணியம் பாடியிருப்பார்! கார்த்திக் பாடியிருப்பார்! கேட்கவே பரவசமாக இருக்கும்! வன்னியிலே பிரபாகரன் வளர்த்தெடுத்த கலைகள் பற்றி, தனிப்பதிவுகள் ஆறேழு எழுதினால் தான் தகும்!
வன்னியின் எல்லைப் பகுதிகளில் கடும் சண்டைகள் நடைபெற்ற 2007 ம் ஆண்டு காலப்பகுதி! கிளிநொச்சியிலே சில தமிழக சிற்பாச்சாரிகள் தங்கியிருந்து, ஒரு மிகவும் வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு நூதன சாலையை நிர்மாணிக்கிறார்கள்! “ தமிழீழ தேசிய நூதன சாலை” அது! அதன் வேலைப்படுகளைப் பார்த்தால் மண்டை விறைக்கும்! இங்கு பாரிஸின் லூவ்ர் மியூசியத்தைப் பார்த்தது போலவே இருக்கும்! அவ்வளவு அழகிய வேலைப்பாடுகள்! உலகில் அழகான தெரு
அதற்கு அருகிலே “ சந்திரன் பூங்கா” என்று ஒரு உயிரியல் பூங்கா! தொங்கு பாலம்! எத்தனையோ விதமான பறவைகள், விலங்குகள்! எல்லாமே தமிழில் பொறிக்கப்பட்ட பெயர் பலகைகள்! விளக்க அட்டைகள்! பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கும்! இதைவிட விடுதலைப்புலிகள் கட்டியெழுப்பிய மருத்துவத்துறை பற்றியும் அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் பற்றியும் சொல்ல பல பத்து பதிவுகள் போட வேண்டும்!
வன்னியிலே “ கணிநுட்பம்” என்று ஒரு கம்பியூட்டர் சஞ்சிகை வந்தது! தலைவரின் மகன் சாள்ஸ் ஆண்டனிதான் அதன் நிர்வாகி! என்ன சொல்வது? சத்தியமா கொழும்பில் இருந்துகூட அப்படி ஒரு சஞ்சிகையை நான் பார்த்ததில்லை! அதன் அட்டையத் தொட்டுப் பார்த்தால் கை கூசும்! புகைப்படத்துறையும், அச்சகத்துறையும் அங்கிருந்ததைப் போல வேறெங்கும் நான் காணவில்லை!
வன்னியில் இயங்கிய வங்கிகள் பற்றி சொல்லவா வேண்டும்? உங்களுக்கு வங்கியிலே வேலை பார்க்க வேண்டுமா? அப்படியானால் அதற்க்கு லஞ்சப் பணமாக ஒரு தொகை கொடுக்கணுமே! அடப்போங்கப்பா, திறமை இருந்தால் வேலை! ஒரு சல்லிப் பைசா தேவையில்லை! இங்கு ஐரோப்பாவில் இருக்கும் வங்கிகள் போலவே!
வன்னியின் ஒவ்வொரு கட்டுமானத்தையும், அணுவணுவாக ரசித்தேன்! அனைத்துமே ஐரோப்பாவுக்கு நிகரானவை! இன்னும் என்னென்ன கட்டமைப்புக்கள் எல்லாம் வன்னியில் இருந்தன என்பதை பின்னூட்டம் போடும் நண்பர்கள் வந்து சொல்வார்கள் என்று நம்புகிறேன்!
ஒன்று தெரியுமா? இத்தினூண்டு குட்டி வன்னியில் 7 விமான ஓடுபாதைகள் இருந்ததாக, அரச படையினர் சொல்கிறார்கள்! ஒரு வேளை நாடு கிடைத்திருந்தால்…., சொல்லவே வேண்டாம் நிச்சயமாக ஒரு குட்டி ஐரோப்பாவே அங்கு உருவாகியிருக்கும்! இங்கு ஃபிரான்ஸில், இவர்கள் எந்தளவுக்கு தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது, எமக்கும் மிக இயல்பாகவே நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், மண் பற்றும் வந்துவிடுகிறது! ஆனால் எமக்குத்தான் நாடே கிடையாதே! என்ன செய்ய?
தமிழீழம் என்ற மண் மீது வைக்கவேண்டிய அத்தனை பற்றுக்களையும் நான் இந்த ஃபிரெஞ்சு தேசத்தின் மீது வைத்திருக்கிறேன்! உலகத்தில் மிகவும் அழகான சாலை இங்குதான் இருக்கிறது! அதில் நடக்கும் போது, கிளிநொச்சி 9 சாலையில் நடப்பதாகவே தோன்றும்! மோனாலிஸா ஓவியம் இருக்கும் லூவ்ர் மியூசியத்துக்குப் போகும் போதெல்லாம், எனக்கு அந்த கிளிநொச்சி மியூசியத்துக்குப் போவதாகவே நினைப்பு வரும்! பாரிஸ் நகரின் மத்தியில் இருக்கும் கொன்கோர்ட் பூங்காவில் நிற்கும் போது, சந்திரன் பூங்காவின் நினைப்பே வந்து போகும்! இங்கிருக்கும் கல்லறைகளும், அவை பராமரிக்கப்படுகின்ற விதமும், அங்கே எமது தெய்வங்கள் உறங்கும், “ துயிலும் இல்லங்களை” நினைவுபடுத்துகிறது!
இங்குள்ள தொலைக்காட்சியில், சுத்தமான ஃபிரெஞ்சில் செய்தி வாசிக்கும் ஒரு ஃபிரெஞ்சுக்காரியைப் பார்க்கும் போது, அவளை சைட் அடிக்கத் தோணுவதில்லை! அங்கே சுத்தமான தமிழிலே செய்தி வாசித்த இசைப்பிரியாதான் நினைவுக்கு வருகிறார்! கூடவே விழியோரம் கொஞ்சம் கண்ணீர்! எப்படிப் பார்த்தாலும் இங்கிருக்கும் ஒவ்வொரு தூணும், துரும்பும் எங்களுக்கு, எமது மண்ணையே நினைவுபடுத்துகிறது! ஆகவே புலம்பெயர் தமிழர்களின் மனசை விட்டு, புலிகளையும், தமிழீழத்தையும், பிரபாகரனையும் அழிக்க முடியாமல் இருப்பதற்கான உளவியல் பின்னணி இதுதான்!