இலங்கையில் 17- 20 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில் ஒரு வருடத்தில் 225 பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும், 20 வயதிற்கு உட்பட்ட பெண் பிள்ளைகள் கர்ப்பமாகும் வீதம் அதிகரித்து வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க சபையில் தெரிவித்தார்.
இலங்கையில் இளம் வயதினர் தற்கொலை வீதம் அதிகரித்து உலகில் இலங்கையை எச்சரிக்கும் நிலைமை உருவாக்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தல் இன்று சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு , மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உளர் வலய அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,இலங்கையில் 18 வயதிற்கு குறைந்த சிறிவர்கள் 46 இலட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 77 வீதமான சிறுவர்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். 7 இலட்சத்து 80 ஆயிரத்திற்கு அண்ணளவான சிறுவர்கள் நகர் புறங்களில் வாழ்கின்றனர். 2 இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மலையகத்தில் வாழ்கின்றனர்.
எனினும் சிறுவர் பாதுகாப்பு சட்டங்கள், சிறுவர் காப்புறுதிகள் என எவையும் இன்னமும் மாற்றியமைக்கப்படாது 25 ஆண்டுகளுக்கும் பழமையான, அதேபோல் வரைபுகளாக மட்டுமே உள்ளது. இவற்றை மாற்றியமைக்க வேண்டும். அதேபோல் அனாதை சிறுவர்கள் மற்றும் குற்றம் செய்த சிறுவர்கள் என இரு சாராரையும் சிறுவர் காப்பகத்தில் தடுத்துவைக்கின்றனர். இதனை மாற்றியமைக்க வேண்டும். அத்துடன் சிறுவர் பாதுகாப்பு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்.
இலங்கையில் இளம் வயது கர்ப்பிணி பெண்களின் வீதம் அதிகரித்து வருகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டில் 20 வயதிற்கு குறைந்த பெண் பிள்ளைகள் 19 ஆயிரத்து 327 பேர் கர்ப்பமாகியுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு 17 ஆயிரத்து 509 பேர் கர்ப்பமாகியுள்ளனர். இலங்கையின் திருமண சட்டங்களில் சாதாரண பொது சட்டம், கண்டிய சட்டம், முஸ்லிம் திருமண சட்டம் என மூன்று திருமண சட்டங்கள் கையாளப்படுகின்றது.
இதில் கண்டிய மற்றும் முஸ்லிம் சட்டத்தின் மூலமாகவே அதிகளவில் சிறுவர் திருமணங்கள் இடம்பெற்று வருகின்றது. இலங்கையில் ஒரு வருடத்தில் 20 வயதிற்கு குறைந்த முஸ்லிம் பெண் பிள்ளைகள் 2525 பேர் கர்ப்பமாகின்றனர் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது. சிறுவர்கள் என்ற எல்லைக்குள் முஸ்லிம் சிங்களவர் என்ற பாகுபாடு இல்லை. அனைவரும் இந்த நாட்டின் சிறுவர்கள். அவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியமானது.
ஆகவே கண்டிய சட்டத்தையும் இஸ்லாமிய சட்டத்தையும் மாற்றியமைக்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என கற்ற முஸ்லிம் சமூகத்தினர் கூறி வருகின்றனர். ஆகவே அதனை கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.