அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 14, 2019

அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்!

பசிக்கிறதம்மா…  பசிக்கிறது!  

இரு கரம் கூப்பி
கேட்கின்றேன்.
என் வயிற்றினுள்
ஏதோ சத்தங்கள்
பல கேட்கின்றது.
எனக்கு அச்சத்தம்
என்னவென்றும்
தெரியவில்லை.
ஒன்றும்
புரியவும் இல்லை.
ஈர் இரண்டு நாட்களாக
எந்த உணவும்
உண்ணவில்லை.
இரண்டு நாட்களாக
மலம் கூடக்கழிக்கவில்லை.
ஒட்டிய வயிற்றுடன்
அலைந்து திரிகின்றேன்.
ஒரு பிடி உணவேனும்
தருவீர்களென எண்ணி!
எனைப்பெற்றவர்கள்
உயிரோடு இருந்திருந்தால்
நான் வருவேனா
உங்களின் வாசல் தேடி?
முலைப்பால் கூட
முழுதாகப்பருகவில்லை.
எனை வயிற்றினில் சுமந்தவளும்
வயிராற உணவு உண்டதில்லை!
முகவரி தெரியாத எனைப்பார்த்து
மூதேவி என்கின்றார்கள்!
நான் என்ன தவறு செய்தேனோ –
எனை வசை பாடுகின்றார்கள்.
இவர்களிடம் நான்
முத்தம் ஒன்று கேட்டேனா?
இல்லை, சொத்தில் பங்கு கேட்டேனா?
இல்லை, சொகுசுப்பஞ்சணை கேட்டேனா?
இல்லை, நீ என் சொந்தமெனச்சொன்னேனா?
உங்கள் எச்சமான மிச்சமாக
இருக்கும் உணவைத்தானே கேட்கின்றேன்.
ஒரு பிடியேனும் தருவீர்களென எண்ணி!
ஒரு சாண் வயிறுதான்
ஆனால், ஒன்றும் புரியவில்லை எனக்கு.
கல்லுடைக்கும் இயந்திரம் போல
என் வயிற்றுக்குள்
பல சத்தங்கள் கேட்கின்றது.
என்னால் நிற்கக்கூட  முடியவில்லை.
கால்கள் தளர்கின்றது.
நடக்கவும் முடியவில்லை.
கண்கள் இருட்டுகின்றன.
கதறி அழுவதற்குக்கூட
முடியவில்லை!
தொண்டை வரண்டு
கண்களில் நீர் கூட வர மறுக்கிறது.
உதடுகள் மூடி
உலகமே தலை கீழாகச்சுற்றுவது போல்,
உணர்வற்றுப்போனது எனக்கு!
ஒரு தடவையேனும் – சற்று
எனை குனிந்து பாருங்களேன்.
என்னால் முடியவில்லையே?
கரம் கொடுத்தேனும் உதவிடுங்களேன்!
இல்லையென்றால்
எனை கருணைக் கொலை
செய்து விடுங்களேன்!
அதுவும்…. முடியவில்லையென்றால்
ஓர் உதவி செய்யுங்களேன்!
நான் இறந்த பிறகு
என்னுடலை எரித்திடவோ,
புதைத்திடவோ வேண்டாம்!
பட்டினியால் இறந்த எனை
பசியால் வாடும் மிருகங்களுக்கே
உணவாக்கி விடுங்கள்!
அவையேனும் பசியாறட்டும்!!!
-சு.ப காண்டீபன்-


-தமிழர் குரல்-