கருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும் சுடர்விடுவார்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 11, 2019

கருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும் சுடர்விடுவார்!

கலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும் என்னால் உன்னை நினைக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ்கூறும் நல்லுலகில் நீங்கள் நிகழ்த்திய இல்லை செய்து விட்டு சென்ற பணிகள் தியாகங்கள் ஏராளம்.
அய்யன் அய்யனே,
நான் ஓர் ஈழத்து அகதித்தமிழன், நீவீரோ இந்தியத்தமிழன். இரு அரசுகளின் இறையாண்மைகளும் ஒன்றல்ல. இந்த மாறுபட்ட அரசியல் கோட்பாட்டுக்குள் நிண்றுகொண்டே நீங்களும் என்னை நேசிக்க முடியும் . நானும் உங்களை நேசிக்க முடியும். இதை உணர்ந்தால் நீங்கள் எமது இனத்துக்கு செய்தது தவறு என்று விமர்சிப்போர் அதை நிறுத்தி உம்மை நேசிக்க முடியும். அனால் அது சாத்தியமில்லை என்றே நம்புகின்றேன். காரணம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆர் அவர்களை எமது தலைவன் நேசித்தமையினால் அந்த நேசம் ஒருவிதமான தவறான புரிதலோடு பார்க்கப்பட்டு அது தங்களை ஓர் எதிரியாக பார்க்கும் ஒரு நிலையை ஒருசில அல்லது ஒரு பிரிவினரால் பர்க்கப்படுவது ஒட்டு மொத்த ஈழத்தமிழினமும் உங்களுக்கு எதிரிகள் என்கின்ற ஓர் மாயை உருவாக்கப்பட்டு விட்டது. இந்த நிலைக்காக உங்களை நேசிக்கும் நாம் வருந்துகின்றோம்.
பெருமகனே போய்வாருங்கள்.
உங்களின் தமிழ்பணியை, ஈழத்தமிழர்கள் மீதான உங்கள் உறுதியான நிலைப்பட்டை காலங்கடந்தாவது எம் ஈழத்தமிழினம் நன்கு உணரும் என்பது நியம்.
உங்களுக்கு ஓர் அஞ்சலி செலுத்தமுடியாத எங்கள் இனம் உங்களை நினைத்து நெஞ்சுக்குள் நீபமேற்றி நிறைவு கொள்கின்றது.
தமிழ் தேசியத்தின் ஆன்மாவை தன் தோளிலும் மார்பிலும் சுமந்து போராடி உதிரத்தில் நீராடி வீரச்சாவடைந்த தங்கள் தலைவனுக்கே வணக்கம் செலுத்த முடியாத ஈனப்பிறவிகளான கோழைகள் எப்படி தமிழ் வளர்த்த ஒரு தமுழ்மகணுக்கு பெருவெளியில் தீபமேற்றும்….
கலைஞர் எனும் கருப்பொருளே
காவியத்தாயின் பெரும் பொருளே
சுயமரியாதையின் சுடர் பொருளே
போய் வாருங்கள்.
எம் நெஞ்சிருக்கும் வரை உங்கள் நினைவிருக்கும் என போற்றும்…..
அகதித்தமிழன்
கிருஸ்ணா அம்பலவாணர்.
இனி,
எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், மேடைப் பேச்சாளர், நாடகவியலாளர், திரைப்படக் கலைஞர், அரசியல் கட்சித் தலைவர் என்று பட்டியலுக்குள் அடங்காத பன்முகத்திறன் களின் அபூர்வத் தொகுப்பும் சமகாலத் தமிழ் அரசியலின் அடையாள முமாக விளங்கிய மு.கருணாநிதி (03.06.1924 07.08.2018) தன்னுடைய பயணத்தை நிறைத்துக்கொண்டுவிட்டார். தமிழ்நாடு தன்னுடைய மாபெரும் அரசியல் ஆளுமையை இழந்து நிற்கிறது.
தன்னுடைய எல்லா திறன்களையும் அரசியலுக்கான களமாகவே கையாண்டவர் கருணாநிதி. காலம் அவருடைய ஆகிருதிக்கேற்ற ஆயுளை வழங்கியது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், வசதிகள் ஏதுமற்ற குக்கிராமமான திருக்குவளையில் 1924, ஜூன் 3-ல் பிறந்தவர். பள்ளி வயதில் பட்டுக்கோட்டை அழகிரியின் சொற்பொழிவுகளைக் கேட்டு, பகுத்தறிவுச் சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டவர், பெரியாரைத் தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண் டார். அண்ணா அவருக்கு வழிகாட்டியானார். பேச்சு, பத்திரிகை, நாடகம் என்று அன்றைய திராவிட இயக்கத் தலைவர்கள் பலரையும் போலவே கருணாநிதியின் பயணமும் தொழிற்பட்டது என்றாலும் மிக இள வயதிலேயே எல்லாவற்றையும் தொடங்கியவர். விளைவாக, அவர் அடைந்த வெற்றிகள் ஒவ்வொன்றும் யாராலும் நெருங்க முடியாத சாதனைகள் ஆயின.
எண்பதாண்டு பொது வாழ்க்கை, அதில் அறுபதாண்டுகள் தோல்வியை ஒருபோதும் பார்த்திராத சட்ட மன்ற உறுப்பினர், ஐம்பதாண்டுகளாக ஒரு பெரும் கட்சியின் தலைவர், தமிழ்நாடு போன்ற பல நாடுகளுடன் ஒப்பிடத்தக்க பெரும் ஜனத்தொகை கொண்ட ஒரு மாநிலத்தின் நீண்ட நாள் முதல்வர், நீண்ட நாள் எதிர்க்கட்சித் தலைவர் என்று கருணாநிதி கடந்திருக்கும் சாதனைகளின் மகத்துவத்தை உணர வேண்டும் என்றால், இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் அவரை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சிக் காலத்தில் ‘திராவிட நாடு’ கனவோடு அரசியல் களமிறங்கிய தலைமுறையைச் சேர்ந்தவர் கருணாநிதி. அந்தக் கனவு சாத்தியமாகாதபோது, ‘இந்திய ஒன்றியம்’ என்கிற கட்டுமானத்தில் ஒரு மாநிலம் என்கிற அமைப்புக்குள் நின்று தன்னுடைய மக்களுக்கான, தன்னுடைய நிலத்துக்கான நலன் களையும் உரிமைகளையும் அதிகாரங்களையும் எப்படி சாத்வீக ரீதியாக, ஜனநாயக முறைப்படி வென்றெடுப்பது என்பதற்கான வழி முறையை உண்டாக்குவதில் அண்ணா உருவாக்கிய திமுக ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தது. சொல்லப்போனால், இந்தியா என்கிற கருத்தை மேலும் பன்முகப்படுத்துவதற்குச் செழுமையான கதையாடலை அது உருவாக்கியது. அதை விஸ்தரித்தவர் கருணாநிதி.
இந்தியா இருக்கும் வரை கருணாநிதி முன்னெடுத்த ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ முழக்கம் நினைவுகூரப்படும். சட்ட மன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றினார். மாநிலத் துக்கு என்று ஒரு தனிக் கொடியை முன்மொழிந்தார். இலங்கைக்குப் போரிடச் சென்ற இந்திய ராணுவத்தால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட செய்தி வந்தபோது சொந்த நாட்டு ராணுவத்தையே விமர்சித்தார் நாடு திரும்பிய ராணுவத்தை வரவேற்கச் செல்வதையே புறக் கணித்தார். எந்த ஒரு இடத்திலும் தமிழ், தமிழர் நலன் என்பதற்கு முன்னுரிமை அளித்தார். அதேசமயம், தன்னுடைய ராஜதந்திர காய் நகர்த்தல்களால் இந்தியா என்கிற கருத்துக்கும் செழுமை சேர்த்தார். இந்தியாவில் கூட்டணி யுகத்தின் தளகர்த்தர்களில் ஒருவர் அவர். கூட்டாட்சிக்கான முன்னேற்பாடாக கூட்டணி ஆட்சியைக் கையாண்ட வர். இந்தியாவின் ஏழு பிரதமர்களின் ஆட்சியில் நேரடியாகவோ, மறை முகமாகவோ அவருடைய பங்களிப்பும் செல்வாக்கும் இருந்தது.
ஒரு மாநில முதல்வராக பெரிய தொலைநோக்கர் என்று கருணாநிதியைச் சொல்லலாம். நவீன தமிழ்நாட்டின் கட்டுமானத்தில் முற்பகுதி அடித்தளத்தைக் காமராஜர் மேற்கொண்டார் என்றால், பிற்பகுதி அடித்தளத்தைக் கருணாநிதி மேற்கொண்டார். தமிழ்நாடு முன்மாதிரி என்று சொல்லத்தக்க சமூக நீதியோடு பிணைக்கப்பட்ட ஒரு வளர்ச்சியை அவர் முன்னெடுத்தார். உணவுப் பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழ்நாடு, உணவு உபரி மாநிலமாக உருவெடுத்ததில் அவருக்குப் பங்குண்டு.
ஒருபுறம் இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி உழவர்களே நேரடியாக தங்கள் விளைபொருட்களைச் சந்தைப்படுத்தும் உழவர் சந்தை களையும் குக்கிராமங்களையும் சென்றடையும் மினி பஸ்களையும் அவர் சிந்தித்தார் மறுபுறம் தகவல் தொழில்நுட்பம் ஒரு புதிய புரட்சிக்கு வித்திடும் என்பதை எல்லோருக்கும் முன்பு கணிப்பவராக இருந்து, நாட்டுக்கே முன்னோடியாக தகவல் தொழில்நுட்பக் கொள்கையை அறிமுகப்படுத்துபவராகவும் அவர் இருந்தார்.
சமூக நீதியில் அவர் காட்டிய அக்கறை, சாதி மத எல்லை கடந்து அவர் கண்ட தமிழ்ச் சமூகக் கனவின் வெளிப்பாடாக சமத்துவபுரங்களைச் சொல்லலாம். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றினார். ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக்கான ஏராளமான காரியங்களை ஆற்றியதோடு அவர்களிலே மோசமாகப் பின்தங்கியிருந்த சமூகங்கள் முன்னேற உள் ஒதுக்கீட்டையும் கொண்டுவந்தார். தமிழ்நாட்டில் தனித்துவமாக 69% இடஒதுக்கீடு தொடர்வதற்கு அவரும் முக்கியமான காரணம். பெண்கள் முன்னேற்றத்திலும் பெரும் அக்கறை காட்டினார். குடும்பச் சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு என்பதைச் சட்டமாக்கினார். மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம், ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம் கொண்டுவந்தார். அரசுப் பணியில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்க வகை செய்தார்.
தன்னுடைய தொடக்க நாட்களில் கை ரிக் ஷாக்களை ஒழித்து சைக்கிள் ரிக் ஷாக்களைக் கொண்டுவந்ததாகட்டும்; பிச்சைக்காரர்கள், தொழுநோயாளர்களின் மறுவாழ்வுக்குத் தனி இல்லங்களை உருவாக்கியதாகட்டும்; பிந்தைய நாட்களில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் விஷயத்தில் அந்தப் பெயர்கள் உள்பட அவர் காட்டிய அக்கறைகளாகட்டும், தொடர் கரிசனத்தை விளிம்புநிலையினரிடம் அவர் வெளிப்படுத்தினார். அதேபோல, சிறுபான்மையினரின் பாதுகாவலராகச் செயல்பட்டவர். நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்படுவதில் அவர் காட்டிய அக்கறைக்கான பெரிய சான்று நெருக்கடிநிலைக் காலக்கட்டத்தில் அவர் வெளிப்படுத்திய எதிர்ப்பு.
எல்லா அரசியல்வாதிகளையும்போல கருணாநிதியும் தவறுகள் இழைத்தார். விமர்சனங்களை எதிர்கொண்டார். ஊழல், குடும்ப வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகள் அவருடைய இறுதிக் காலத்தில் அவருடைய புகழைக் குலைத்தன. பெரியார், அண்ணா வழியில் அவற்றையும் அவர் தவிர்த்திருந்தால், அவருடைய இடம் இன்னும் மேலே சென்றிருக்கும். என்றாலும், எல்லாவற்றையும் தாண்டியும் கருணாநிதியின் ஒட்டுமொத்த பங்களிப்பு தமிழ்ச் சமூகத்தை உயர்த்தியிருக்கிறது. சாதியத்தில் திளைக்கும் இந்திய அரசியலில் ஒரு விளிம்புநிலைச் சமூகத்திலிருந்து வந்து, சாதிக்கு எதிராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, இந்திய அரசியலின் உச்சம் தொட்ட அவருடைய சாதனைகள் இந்திய ஜனநாயகத்துக்குப் பெருமை சேர்க்கின்றன. நவீன தமிழகத்தின் வெற்றிகளில் அவருடைய பங்களிப்புகள் மிளிர்கின்றன. தமிழ் அரசியலின் பேரொளி கருணாநிதி. என்றும் தமிழ் மக்கள் நினைவில் அவர் சுடர்விடுவார்!