ஓயவும் மாட்டோம் ஓடி ஒழியவும் மாட்டோம் ஓர் நாள் திருப்பி அடிப்போம் முடியாமல் போனால் மீண்டும் பிறப்போம் தமிழனாக பெற்றதை திருப்பிக்கொடுக்க…. - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 21, 2019

ஓயவும் மாட்டோம் ஓடி ஒழியவும் மாட்டோம் ஓர் நாள் திருப்பி அடிப்போம் முடியாமல் போனால் மீண்டும் பிறப்போம் தமிழனாக பெற்றதை திருப்பிக்கொடுக்க….

பார்த அவலம்களை இன்னமும் மறக்க முடியவில்லை . கண்களில் வழிந்த நீரை துடைப்பதற்கு இரண்டு கைகள் போதவில்லை உலகெங்கும் சிதறி இருக்கும் என் இனத்தில் இருந்து தெறித்த ஒரு துளியாக நான் அலைந்துகொண்டிருந்தேன்….என் மொழியின் சுவடுகளே இல்லாத சனசந்தடிமிக்க அந்த நகரத்தில் புள்ளிகளுடன் புள்ளியாய் வெள்ளைகளின் நடுவே நாடிழந்த ஒரு அகதித்தமிழனாய் நான் நின்றுகொண்டிருந்தேன்….
ஒரு தலைமுறை புதைக்கப்படுவதை மெளனமாய்,இயலாதவர்களாய் நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்….நாங்கள் சக்தியற்றவர்களாக நின்றோம்…எங்கள் பலம் ஒரு எல்லைவரைதான் இருந்தது..அதைத்தாண்டி எதையும் செய்ய முடியாத இயலாதவர்களாக இருந்ததுதான் எம் வாழ்நாட்களில் இனி எப்பொழுதும் மறக்கமுடியாத ஒரே ஒரு குற்றவுணர்ச்சியாக வரலாறு முழுக்க எம்மை வதைத்துக் கொண்டிருக்கும்..

ஒற்றைவரியைக்கூட எழுதமுடியாமல் எம் கவிஞ்ஞர்கள் பலரின் பேனாக்களின் வழியே இன்றும் ஓலங்களே இறங்குகின்றன….அவலமாக செத்துப்போன எம் குழந்தைகளின் கண்ணீர்த்துளிகள் பேனாமையாய்க் கரைந்தோடுகின்றன….இன்னும்கூட இரக்கமின்றி,எந்தவிதக்குற்றவுணர்வுமின்றி,கொஞ்சம்கூட வெட்கமின்றி எங்கள் எழுத்தாளர்கள் பலரின் பேனாக்கள் தங்கள் குழந்தைகளின் குரல்வளையை நெரித்த கொலைகாரர்களின்குரலாய்ப் பேசுகின்றன…தம் உறவுகளின் மேல் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் இனப்படுகொலையை,தம் சகோதரிகளின் மேல் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகளை,எமதுமக்கள் சொல்லவே வாய்கூசும் எத்தனையோ உண்மைகளை தங்கள் குழந்தைகளின் புதைகுளிகளின்மேல் நின்றபடி நியாயப்படுத்துகின்றன….

வெட்கமற்ற உங்கள் எழுத்துக்கள் இந்த உலகில் இன்னும் விற்றுத்தீர்ந்துகொண்டிருப்பதுதான் செத்துப்போன எம் குழந்தைகளை இன்னுமொருமுறை சாகடிக்கிறது,புதைக்கப்பட்ட என்னினத்தை மீண்டுமொருமுறை புதைக்கிறது….பாடல்களையும்,ஆடல்களையும்,திரைப்படங்களையும் பத்துக்கோடி தமிழர்களின் ஊடகங்கள் ஒளிபரப்பிக்கொண்டிருக்க தெருக்கோடிகளில் நின்றபடி எங்கள் கண்ணீரைப் பதிவுசெய்ய நாங்கள் எப்பொழுதும் சில வெள்ளைமனிதர்களின் ஊடகங்களை தேடிப்போகவேண்டியிருக்கிறது….எங்கள் குழந்தைகளின் ஓலங்கள்,எங்கள் சகோதரிகளின் கண்ணீர்கள்,எங்கள் அண்ணண்களின் கண்களில் தெரிந்த இயலாமைகள்,ஏக்கம்கள்,மரணத்தின் நிழல்கள் என எங்கள் அவலம்கள் எல்லாம் நல்லிதயம் படைத்த பல வெள்ளையின மனிதர்களின் பேனாக்களில் இருந்து இன்றும் இரத்தமாய்க் கசிந்துகொண்டிருக்கின்றன…எங்கள் குழந்தைகள் சிந்திய இரத்தத்தை சுவைத்தபடி இரக்கமின்றி எழுதிக்கொண்டிருக்கும் என் இனத்தில் தவறிப்பிறந்தவர்களே…உங்கள் மரணம் எழுதப்படும் கடைசி நாளில்,நீங்கள் எழுதியவைகள் மரணவேதனையாக உங்களை சூழ்ந்துகொள்ளும் ஒரு நாளில்,எங்கள் குழந்தைகளின் கண்ணீரை எதிர்கொள்ளமுடியாமல் கூனிக்குறுகிப்போய் நிற்பீர்கள்…ஒரு பெரும் தரித்திரமாகவே வரலாற்றில் உங்கள் இருப்பு எழுதப்படும்…

முள்ளிவாய்க்காலுடன் என் இனம் நிம்மதியான தூக்கம் இழந்து ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன…அணைக்கமுடியாத விடுதலை நெருப்பை அணைக்கத்துடித்த ஆக்கிரமிப்புக்கரங்கள் ஒரு இனத்தின் குரல்வளையை நெரித்துக்கொன்றுவிட்டுக் கொக்கரிக்கிறது…பேசமுடியாத ஊமையாய் ஆக்கப்படிருக்கிறது ஈழத்தில் எமது இனம்…

எங்களுக்கென்றொரு தேசம் இருந்தது….எங்களுக்கென்றொரு கூடிருந்தது…படுத்துறங்க மரநிழல் இருந்தது…நிம்மதி என் தேசத்து நிழலில் படுத்துறங்கியது…இன்று வெறுமையும்,களைப்பும்,துயரமுமாய் என் தேசத்து வீதிகள் வெறித்துக்கிடக்கின்றன….வன்னியின் பொட்டல்வெளிகளில் அணலாய் எரிக்கும் துயரங்களிலும்,அடக்குமுறைகளிலும் இருந்து ஆவியாகின்றன எம்மக்களின் கண்ணீர்த்துளிகள்…பள்ளிபுத்தகங்களுக்குப் பதிலாக எங்கள் குழந்தைகள் வாழ்க்கைச் சுமைகளை சுமந்தபடி தள்ளாடுகிறார்கள்…அடுத்தவேளை உணவிற்க்கு வழிதேடுவதைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்கமுடியாதபடி அவர்களின் எதிர்காலங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன…எரித்துக்கொண்டிருக்கும் வேதனைகளுடனும் ஆற்றுப்படுத்தவே முடியாத குற்றவுணர்வுகளுடனும் உடல்கூட்டுக்குள் அடைந்துகிடக்கிறது எமது உயிர் வாழ்க்கை…

இப்பொழுது எங்கள் குழந்தைகளுக்குத்தேவை வெறும் அரசியல்க்கோசம்களும் வெற்று வசனம்களும் அல்ல…ஏக்கத்துடன் இருக்கும் அந்தக்குழந்தைகளின் கண்களில் நம்பிக்கை ஒளியை விதைக்கும் எதிர்காலத் திட்டங்கள்,தூக்கிவிட ஒரு தோளுக்காக ஏங்கும் அந்தப் பிஞ்சுகளின் கைகளைப் பிடித்து அழைத்துச்செல்லும் இதயங்களின் உதவிகள்,அவர்களின் வாழ்க்கை நேர்கோட்டில் செல்லும் வகையில் அவர்களை தாங்கிப் பிடிக்கக்கூடிய ஒரு கட்டமைப்பைக் கட்டி எழுப்புதல்,இன்னமும் போரின் எச்சங்களில் இருந்து மீளாமல் இருக்கும் எங்கள் பிஞ்சுகளின் விழிகளில் இருக்கும் அச்சத்தைப் போக்கி அவர்களை ஆற்றுப்படுத்தி மீண்டும் கல்வியில் இணைத்து எல்லாக்குழந்தைகளைப் போலவும் ஒரு அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும் திட்டங்கள்,ஏற்கனவே இவற்றைச் செய்துகொண்டிருக்கும் நேர்மையான அமைப்புகளை இனங்கண்டு தனிப்பட்ட வகையில் இவற்றைச் செய்துகொண்டிருக்கும் நல்ல உள்ளங்களையும் ஒன்றாக்கி தாயகத்துக்கு உதவும் ஒரு வலிமையான அமைப்பாக புலம்பெயர்ந்தவர்கள் உருவாகுதல் போன்றனவே தற்போது எங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற முக்கியமாகவும்,உடனடியாகவும் நாம் செய்யவேண்டியவைகளாக இருக்கிறது…

எனதருமை உறவுகளே..! எங்கள் குழந்தைகள் பசியால் வாடியபோது,பாலுக்கு ஏங்கியபோது,பங்கர்களின் இருட்டுக்குள் இருந்து வெளிச்சத்தைதேடியபோது,பிணங்களின் நடுவே அனாதையாக நின்றுகொண்டு மனங்களைத்தேடியபோது மனச்சாட்ச்சியே இல்லாத உங்கள் சிலரின் இதயங்கள் காட்சி ஊடகங்களின் முன்னே கால்களை நீட்டியவாறு உணவுக்கோப்பைகளை ருசிபார்த்துக்கொண்டிருந்தன..எந்தவித சலனுமுமின்றி உங்கள் உலகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது….எந்தக்காரணமும் இன்றிக் கொல்லப்பட்ட எம்மக்களைக் காக்க மறந்து எப்படித்தான் வீழ்ந்துகிடந்தீர்களோ..? உறவுகளே…!செத்துப்போனவர்கள் உங்கள் ரத்தம்கள் என்ற சுயநினைவுகூட இன்றி எப்படி இயங்குகிறது உங்கள் உலகம்…இரக்கமில்லாதவர்களே…!சினிமாக்கதாநாயகர்களின் அழுகை ஒலி விழுந்த உங்கள் காதுகளில் எங்கள் பிஞ்சுக்குழந்தைகளின் இதயத்துடிப்பு கடைசிவரை விழவே இல்லையே…ஏன் என்று கேட்கக்கூட விருப்பமில்லாது உங்கள் கண்களையும்,காதுகளையும் இறுக மூடிவைத்திருந்தீர்கள்…இன்றுவரை திறக்கவிலையே உங்கள் பலரின் இரும்பு இதயங்கள்..

எங்கள் குழந்தைகளின் கண்ணீரை கைகளில் ஏந்தியபடி வீதிகளில் நீதிகேட்க இன்னும் சில இளைஞ்ஞர்கள் இருக்கிறார்கள்…நீறுபூத்த நெருப்பாக கணன்றுகொண்டிருக்கும் இதயத்துடன் நீதிக்காக போராடும் ஓர்மத்துடன் அவர்கள் என்றும் இருப்பார்கள்…அவர்களில் ஒருவனாய் நானுமிருப்பேன்….மரணம் வரைக்கும் எங்களை அது ஓயவிடாது…நாங்கள் கைகளில் ஏந்திவைத்திருப்பது வெறும் பதாதைகளும் கொடிகளும் அல்ல…அவை எங்கள் ஆன்மாவின் வெளிப்படுத்தமுடியாத பெரும் வலி,கதறல்..எப்படியாவது உலகின் காதுகளுக்கு கொண்டுசேர்த்துவிடவேண்டும் என்ற பெரும் துடிப்பு…

செத்துப்போன எங்கள் தங்கைகளின் ஆன்மாக்கள் எங்கள் உடலை கடைசிவரைவழிநடத்தும்…மரணம் வரைக்கும் எம் இனத்தின் விடிவிற்க்கு உழைத்துக்கொண்டே இருப்போம்…என் இனத்தின் துயரங்களை தீர்க்கமுடியாத ஏக்கத்துடனேயே என் உயிர் ஒரு நாள் நின்றுபோகலாம்…அப்பொழுதும் தூங்காத என் ஆன்மா என் தாய்மண்ணில் அலைந்துகொண்டிருக்கும்….என் கல்லறையைத்தாண்டிச்செல்லும் காற்று ஒரு நாள் என் காதில் என் இனத்துக்கு நீதிகிடைத்த சேதி உரைத்துச்செல்லும்…எம் குழந்தைகள் மரணத்தின் வாடையைச் சுவாசிக்காமல் வாழும் ஒரு புதிய தேசம் உருவாகி இருப்பதாகவும் அது உரத்துச் சொல்லிவிட்டுப் போகும்…அப்பொழுது நான் நிம்மதியாகத் தூங்கிப்போவேன்…

– ஈழத்து நிலவன்