கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மத ரீதியில் நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கக்கூடாது என இந்தியாவில் உள்ள 103 சினிமா இயக்குனர்கள் சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் 11ம் திகதி துவங்கி மே 19ம் திகதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் திகதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெற இருக்கிறது.
இதற்காக தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தங்களுடைய தோழமை கட்சிகளுடன் இணைந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியா முழுவதுமுள்ள 103 சினிமா இயக்குனர்கள் ஒன்றாக சேர்ந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், நமது நாடு இதுவரை இல்லாத அளவில் சோதனையான காலகட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. கலாச்சார ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் வேறுபட்டு இருந்தாலும், நாம் எப்போதும் ஒற்றுமையாக வாழ்ந்திருக்கிறோம். ஒரு தேசமாக. இந்த அற்புதமான நாட்டிலுள்ள ஒரு குடிமகனாக இருப்பதற்கு இது ஒரு பெரும் உணர்வு.
ஆனால் அவை தற்போது வெற்று வார்தைகளாகவே உள்ளன. வரும் மக்களவை தேர்தலில் நாம் புத்திசாலித்தனமாக செயல்படவில்லை எனில், பாசிசம் நம் அனைவரையும் கடுமையாக பாதிக்கும். அச்சுறுத்தும் காலமாக மாறும்.
2014-ல் பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்னர் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வகுப்புவாத பிரிவினையை உண்டாக்குவதற்காக மாட்டு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பெயரில் முஸ்லீம் மற்றும் தலித் மக்களை கொடுமைப்படுத்துகின்றனர்.
அவர்களுடைய வெறுப்புகளை இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்பி வருகின்றனர். தேசபக்தி அவர்களின் துருப்பு அட்டை. அவர்களை எதிர்க்கும் தனி நபரோ அல்லது நிறுவனத்தையோ, தேச துரோகிகள் என பெயரிடுகின்றனர். நாட்டுப்பற்றை கொண்டு தான் அவர்கள் தங்களுடைய வாக்குவங்கியை அதிகரிக்கின்றனர். இதில், எமது புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களில் சிலர் தமது வாழ்க்கையை இழந்துள்ளனர் என்பதை மறந்து விடாதீர்கள்.
ராணுவத்தை பயன்படுத்துவதும் அவர்களுடைய திட்டத்தில் ஒன்று. ஒரு தேவையற்ற போரில் கூட தேசத்தை ஈடுபடுத்தும் அபாயமானவர்கள். கலை படைப்புகளை தடை செய்து அதை மக்களுக்கு தெரியாத வண்ணம் பார்த்துக்கொள்கிறார்கள். மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் நடந்த பேரழிவுகளை வெற்றி என ஜோடித்து மூடிமறைக்க திட்டமிடுகின்றனர். இவர்களுக்கு இன்னும் ஒருமுறை ஆட்சியை கொடுப்பது மிகப்பெரிய தவறு. அப்படி கொடுத்தால் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் அடிக்கும் கடைசி ஆணியாக இருக்கலாம்.
'இந்த அபாயகரமான ஆட்சியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவராமல் இருக்க உங்களால் முடிந்ததை செய்யுங்கள்' என கேட்டுக்கொள்கிறோம். இந்திய அரசியலமைப்பை மதிக்கும், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாக்கிற, எல்லா வகை தணிக்கைகளிலும் இருந்து விலகி நிற்கும் ஒரு அரசாங்கத்தை தெரிவு செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்து இயக்குனர்களின் கையெழுத்துடன் அந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.
இந்த இயக்குநர்கள் பட்டியலில் தமிழ்ப்பட இயக்குனர்களான, வெற்றிமாறன், கோபி நயினார், திவ்யா பாரதி, சனல்குமார் ஆகியோரும் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.