2வது மனைவியும் ஊழியரின் மனைவி… 3வது மனைவிக்காக ஊழியர் கொலை: ஹோட்டல் சரவணபவன் உரிமையாளரிற்கு தண்டனை உறுதியானது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, March 29, 2019

2வது மனைவியும் ஊழியரின் மனைவி… 3வது மனைவிக்காக ஊழியர் கொலை: ஹோட்டல் சரவணபவன் உரிமையாளரிற்கு தண்டனை உறுதியானது!


ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரவண பவன் உணவக உரிமையாளர் பி. ராஜகோபால் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2009, மார்ச் 19-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பி. ராஜகோபால், பட்டுராஜன், டேனியல், தமிழ்ச் செல்வம், கார்மேகம், ஜனார்தனன் உள்ளிட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, எம்.எம். சந்தானகெளடர், இந்திரா பானர்ஜி ஆகியோர் வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தனர். அதில், சாந்தகுமாரைக் கழுத்தை நெரித்து கொலை செய்து வீசிய குற்றத்தை காவல் துறை அனைத்து நிலையிலும் நிரூபித்துள்ளது. கொலை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டதாகவோ, மிகைப்படுத்தப்பட்டதாகவோ இல்லை.

அனைத்து குற்ற வழக்குகளிலும் சந்தேகத்துக்கு இடமின்றி ஆதாரங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். அதே சமயம் அந்த ஆதாரங்கள் முழுமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. வயது மூப்பைக் காரணம் காட்டி எந்தவொரு குற்றவாளியும் தப்பித்துக் கொள்ள முடியாது.



இந்த வழக்கில் உண்மைகள், சூழ்நிலைகள், ஆதாரங்கள் ஆகிவற்றை ஆராயும்போது, விசாரணை நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் அரசு தரப்பின் வழக்கை முழுமையாக விசாரித்து அதன் அடிப்படையில் தீர்ப்பு அளித்திருப்பது நிரூபணமாகிறது. எனவே, விசாரணை நீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியம் எழவில்லை. ஆகவே, இந்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக சரணடைய பி. ராஜகோபால் சார்பில் கோரப்பட்ட அவகாசத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ஜூலை 7-ஆம் தேதிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சரணடையுமாறு தெரிவித்தனர்.

பின்னணி

பி ராஜகோபால்.. சரவணபவன் ஹோட்டல் குழுமத்தின் நிறுவனர். வெற்றி பெற்ற தொழிலதிபர். ஆரம்பத்தில் மளிகைக் கடையைத் தொடங்கி அதில் வெற்றி பெற்று பிறகு சரவண பவன் எனும் மிகப்பெரிய ஹோட்டல் குழுமத்துக்குச் சொந்தக்காரரானவர்.

இவரது ஹோட்டலில் வேலை செய்த பிரின்ஸ் சாந்தகுமாரின் மனைவி ஜீவஜோதியை 3வதாக திருமணம் செய்ய விரும்பினார். ராஜகோபாலின் இரண்டாவது மனைவியும், தனது ஹோட்டலில் வேலை செய்த ஊழியரின் மனைவியாவார்.



ஜீவஜோதியின் தந்தை ராமசாமியும் சரவணபவன் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர் என்பதும், அவர் வேறு பணிக்காக மலேசியா சென்றுவிட்டார்.

ராஜகோபாலின் விருப்பத்தை ஜீவஜோதி ஏற்கவில்லை. 1999ம் ஆண்டு அவர் பிரின்ஸ் சாந்தகுமாரை திருமணம் செய்து கொண்டார். இவர் டியூஷன் டீச்சராக இருந்து, ஜீவஜோதியின் மீதான காதலால் சரவண பவனில் வேலைக்குச் சேர்ந்தவர்.

திருமணம் ஆன நாள் முதலே ராஜகோபால் சாந்தகுமார் – ஜீவஜோதி தம்பதியரை மிரட்டி வந்துள்ளார். திருமணத்தை ரத்து செய்துவிட்டு விலகிவிடுமாறு மிரட்டி வந்தார்.

ராஜகோபால் ஏவிய கூலிப்படையினரால் இருவரும் கடத்திச் செல்லப்பட்டு மிரட்டியும் கூட தம்பதியினர் பயப்படவில்லை. உள்ளூர் காவல்நிலையத்தில் ராஜகோபாலுக்கு எதிராக புகார் கொடுத்தனர்.

அதன்பிறகுதான் ராஜகோபால் தனது நடவடிக்கையை தீவிரமாக்கினார். 2001ம் ஆண்டு சாந்தகுமாரை ஆள் வைத்துக் கடத்திக் கொலை செய்தார். கணவர் காணாமல் போனதாக ஜீவஜோதி 2001 அக்டோபர் 1ம் தேதி புகார் அளித்தார். அதன்பிறகுதான் 31ம் தேதி சாந்தகுமாரின் உடல் கொடைக்கானலில் கண்டெடுக்கப்படுகிறது.

உள்ளூர் ஊடகங்களில் இந்த தகவல் விஸ்வரூபம் எடுக்கிறது. நவம்பர் 23ம் தேதி நீதிமன்றத்தில் சரண் அடைகிறார் ராஜகோபால். விரைவில் ஜாமீனில் விடுதலையாகிறார்.

2003ம் ஆண்டு ஜீவஜோதிக்கு பணம் கொடுத்து வழக்கைத் திரும்பப் பெற முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் பூந்தமல்லி நீதிமன்றம் ராஜகோபலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், ரூ.55 லட்சத்தை அபராதமாகவும், இதில் ரூ.50 லட்சத்தை ஜீவஜோதிக்கு நஷ்ட ஈடாக அளிக்கவும் உத்தரவிடுகிறது.

இதனை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கீழமை நீதிமன்றம், கொலை வழக்கின் கீழ் தண்டனை வழங்கத் தவறியதை எடுத்துக் கூறி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 302ன் கீழ் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். சம்பவம் நடந்து சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜகோபால் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.