காணாமல் போனதாகக் கூறப்பட்ட துபாய் இளவரசி குறித்து முன்னாள் ஐ.நா மனித உரிமை தலைவர் கூறிய கருத்து சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
முன்னாள் ஐ.நா மனித உரிமை செயலாளர் மேரி ராபின்சன் துபாய் இளவரசி விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசின் கருத்தை அப்படியே வழிமொழிந்திருக்கிறார்.
அமீரக ஆட்சியாளர் அரசர் ஷேக் மொஹமத் பின் ராஷித் அல் மக்டூமின் மகள் ஷேய்கா லத்தீஃபா சுதந்திரமான வாழ்க்கை ஒன்றை வாழ்வதற்காக துபாயிலிருந்து தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
ஆனால், மார்ச் மாதம் லத்தீஃபா பயணம் செய்த ஆடம்பரப் படகு இந்தியா அருகே தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் மீண்டும் துபாய் திருப்பி அனுப்பப்பட்டதாக நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர். அப்போதில் இருந்தே அவரைக் காணவில்லை.
பிரான்ஸ் நாட்டின் உளவாளி ஒருவர் மற்றும் ஃபின்லாந்தின் தற்காப்புக் கலை பயிற்றுநர் ஒருவரின் உதவி லத்தீஃபாவுக்கு கிடைத்ததாக பிபிசி நியூஸ் நைட் புலனாய்வு கூறுகிறது.
பின் அவர் பேசிய காணொளி ஒன்று வெளியானது. அதில், தனக்கும் தன் குடும்பத்தினருக்கு எந்த சுதந்திரமும் இல்லை என்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக தாம் இங்கு சித்திரவதை செய்யப்படுவதாகவும் கூறி இருந்தார்.
ஆனால், இளவரசி லத்தீஃபா குறித்து பல மாதங்களாக எந்த தகவலும் வெளிவரவில்லை. அவர் இருக்கிறாரா, இல்லையா என்று தெரியாமல் இருந்தது.
சர்வதேச மனித உரிமை இயக்கங்கள் இளவரசியின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து இருந்தன.
முன்னதாக, ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு, "அவர் எங்கு உள்ளார் என்பதை வெளிப்படுத்தவில்லை என்றால், அவர் நிர்ப்பந்தத்தின்பேரில் காணாமல் போயிருப்பதாகவே ஆகும்" என்று தெரிவித்திருந்தது.
இப்படியான சூழலில் இளவரசியை சந்தித்த முன்னாள் ஐ.நா மனித உரிமை அமைப்பின் தலைவர் மேரி, துபாய் கூறுவதை அப்படியே எதிரொலித்திருக்கிறார்.
இளவரசி குழப்பமான மனநிலை கொண்ட இளம் பெண் என்றும், தன்னை கொடுமைபடுத்தியதாக அவர் கூறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என்றும் மேரி கூறி உள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் இதனை மறுத்திருந்தது. அவர் நலமாக தம் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் கூறி இருந்தது.
பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் பேசிய மேரி, "இளவரசியுடன் நான் உணவு உண்டேன். அவர் அனைவரும் விரும்பத்தக்கப் பெண். அனால், அவர் குழப்பமான மனநிலையில் இருக்கிறார். அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அதனை இப்போது பெற்றுக் கொண்டும் இருக்கிறார்," என்று கூறினார்.
இளவரசி நலன் குறித்து கேள்வி எழுப்பிய மனித உரிமை அமைப்பொன்றின் தலைவர் ராதா ஸ்டிர்லிங் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டர்.
அவர், "துபாய் எழுதி கொடுத்ததை அப்படியே மேரி வரிக்கு வரி ஒப்பித்திருக்கிறார்." என்று கூறி உள்ளார்.