பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவு கோலில் 7.2 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முதலில் தெரிவித்தது. அதன் பின்னர் 6.9 ரிக்டர் என தெரிவிக்கப்பட்டது.
ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 59 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதனை ஒட்டியுள்ள பசிபிக் கடற்பகுதியில் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நிலநடுக்க பகுதியில் இருந்து 300 கிமீ தொலைவிற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடற்பகுதியில் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. ஆனால், அதனை ஒட்டியுள்ள அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.