வணிக ரீதியில் திமிங்கல வேட்டை ஜூலை ஆரம்பம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, December 29, 2018

வணிக ரீதியில் திமிங்கல வேட்டை ஜூலை ஆரம்பம்

ஜப்பான் நாட்டில் பல நூற்றாண்டுகளாக கடலோரப் பகுதி மக்கள் திமிங்கலங்களை இறைச்சிக்காக வேட்டையாடி வந்தனர். திமிங்கல இறைச்சியை அவர்கள் விருப்பமுடன் சமைத்து சாப்பிட்டனர். 

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அங்குள்ள மக்கள் மத்தியில் திமிங்கல இறைச்சி மீதான விருப்பம் அதிகரித்தது. ஆனால் சமீப காலமாக திமிங்கல இறைச்சியை சாப்பிடுவது அங்கு குறைந்தது. 

பல்லாண்டு காலமாக ஜப்பான் திமிங்கல வேட்டையில் ஈடுபட்டிருந்தபோதுகூட ஆராய்ச்சிக்காகத்தான், அவை வேட்டையாடப்படுவதாக கூறியது. ஆனால் திமிங்கல இறைச்சி விற்பனையில் ஈடுபட்டது. இது சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஜப்பானில் வணிக ரீதியிலான திமிங்கல வேட்டை வரும் ஜூலை மாதம் தொடங்கப்படும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்று கூறப்படுகிறது. 

இதற்காக ஐ.டபிள்யு.சி. என்று அழைக்கப்படுகிற சர்வதேச திமிங்கல ஆணையத்தில் இருந்து ஜப்பான் விலகுகிறது. 

இந்த அமைப்பு, திமிங்கல வேட்டைக்கு 1986 ஆம் ஆண்டு முதல் தடை விதித்துள்ளது. 

1951 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பில் ஜப்பான் உறுப்பினராக இருந்து வருவதால் வணிக ரீதியிலான திமிங்கல வேட்டை கூடாது என்ற விதிமுறைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடமை இருந்தது. 

இப்போது வணிக ரீதியிலான திமிங்கல வேட்டைக்கு ஜப்பான் அனுமதி அளிக்கிற காரணத்தால், சர்வதேச திமிங்கல ஆணையத்தில் இருந்து விலகி விட உள்ளது. 

திமிங்கல இறைச்சி சாப்பிடுவது ஜப்பான் கலாசாரம்தான் என்று ஜப்பான் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். 

அதே நேரத்தில் வணிக ரீதியில் திமிங்கல வேட்டைக்கு அனுமதி அளித்தால் அது கடும் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என பாதுகாப்பு குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 

திமிங்கல வேட்டைக்கு அனுமதி அளித்து இருப்பது குறித்து ஜப்பான் அரசின் செய்தி தொடர்பாளர் யோஷிஹிடே சுகா கூறுகையில், “ஜப்பான் நீர்ப்பரப்பில், பொருளாதார மண்டலத்தில் மட்டும் திமிங்கல வேட்டைக்கு அனுமதி தரப்படுகிறது” என கூறினார். 

இதன் காரணமாக அண்டார்டிகா நீர்ப்பரப்பிலும், தென் துருவப்பகுதியிலும் திமிங்கல வேட்டை நிறுத்தப்பட்டு விடும். 

ஆனால் வணிக ரீதியிலான திமிங்கல வேட்டையை அனுமதிக்கும் ஜப்பானின் முடிவுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

அவுஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மாரிசே பேனி மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி மெலிசா பிரைஸ் கூட்டாக விடுத்துள்ள ஒரு அறிக்கையில், “ஜப்பானின் முடிவு எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. வணிக ரீதியிலான மற்றும் ஆராய்ச்சி ரீதியிலான திமிங்கல வேட்டையை நாங்கள் எதிர்க்கிறோம்” என கூறி உள்ளனர்.