ஐ.நா முன்றலில் சீரற்ற காலநிலையிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் திரண்ட தமிழ்மக்கள்!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, September 21, 2021

ஐ.நா முன்றலில் சீரற்ற காலநிலையிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் திரண்ட தமிழ்மக்கள்!!


எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளக்கட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் கலந்துகொண்டிருந்தனர்.

20.09.2021 திங்கள் அன்று பிற்பகல் 14:30 மணியளவில் ஆரம்பமான இக் கவனயீர்ப்பு நிகழ்வில் சுமார் ஒருமணிநேரமாக தமிழ் உறவுகள் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு உரத்தகுரலில் தமது உரிமைக்குரல்களை எழுப்பிய வண்ணமிருந்தனர்.

தொடர்ந்து பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய ஒன்றுகூடலில் தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன், தியாக தீபம் லெப். கேணல் திலீபன், ஈகைப்பேரொளிகளுக்குரிய ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டு மலர்;மாலை அணிவித்தலுடன் அகவணக்கம், மலர்வணக்கத்துடன் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. 

புலம்பெயர் நாடுகளில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்தாலும் தமது வேர்களைத் தேடி அதன் இருப்புக்காக உரத்துக் குரல்கொடுத்த தமிழ் இளையோர்களின் பங்கு இப்பேரணியில் சிறப்பாக அமைந்ததுடன் தமது வாழிட மொழிகளில் புலமைத்துவத்துடனும், ஆளுமையுடனும் அவர்களால் பேச்சுக்கள் வழங்கப்பட்டதுடன், இவ் ஒன்றுகூடலிற்கான பிரகடனமும் வாசிக்கப்பட்டது. 

தமிழீழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும்;, தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் நடாத்தக் கோரியும் வலியுறுத்திய இவ் ஒன்றுகூடலில், புpரித்தானிய நாட்டின் பிரதமர் இல்லத்தில் இருந்து ஆரம்பித்து, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் ஊடாக ஐ.நா நோக்கிப் பயணித்த மனிதநேய ஈருருளிப் பயணத்தை மேற்கொண்ட மனிதநேய செயற்பாட்டாளர்கள் தாம் பயணித்த நாடுகளில் சந்தித்த அரசியல் பிரமுகர்களிடம் வரலாறு தங்களுக்கு வழங்கிய கடமையின் நோக்கத்தை எடுத்துரைத்ததோடு, இன்றைய ஒன்றுகூடலின் போது ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் காரியாலயத்தில் அரசியற் சந்திப்பும் நடைபெற்றதுடன் எமது கோரிக்கைகள் அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது. இச் சந்திப்பில் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையும், இன்றும் தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திப் பேசப்பட்டது.

கொரோனா நோய்த்தொற்றின் இடர்காலச் சூழலிற்கு மத்தியிலும் கலந்து கொண்டிருந்த இனஉணர்வாளர்கள் தமிழீழம் என்ற தேசம்தான் தங்கள் வாழ்வை வளமாக்கும் என்பதிலே உறுதி கொண்டிருந்ததோடு, தேசத்தை மீட்டெடுக்க எல்லாவித அர்ப்பணிப்புக்களையும் செய்யத் தயாராக இருப்பதாக தமிழீழத் தேசியத் தலைவருக்கும், மாவீரர்களுக்கும் உறுதி வழங்கி நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் கலைந்து சென்றனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு