தங்களை பொலிஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்டிருந்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் குருணாகல், வத்தளை மற்றும் சேதவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்ய சந்தேக நபர்கள் பயன்படுத்திய போலி பொலிஸ் அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிப்போரை குறி வைத்து, தம்மை பொலிஸ் அதிகாரிகளாக அடையாளப் படுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் அவர்களை நடமாட்டம் குறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்று, பயணிகளின் பணம் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளையிட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் கைதான மூன்று சந்தேக நபர்களையும் இன்று வெலிசறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை இது போன்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு மேலும் 17 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அஜித் ரோஹன தெரிவித்தார்.