கண்டி, ஹசலக பகுதியில் தனது பெற்றோரின் வீட்டில் தனது மனைவி, பிள்ளைகளுடன் வசிப்பதற்கு இடம் கேட்ட மகன் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஈடுபட்ட தந்தை, தாய், சகோதரி, சகோதரியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மினிப்பே, ஹசலக பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் 28 வயதான இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞன், தனது மனைவி, 3 வயது மற்றும் 21 நாள் குழந்தைகளுடன் தனது பெற்றோரின் வீட்டின் பின்னால் சிறிய குடிசை அமைத்து வசித்து வந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி கூறுகையில்,
கடந்த 6ஆம் திகதி இரவு எனது கணவர், நாங்கள் குடியிருக்க ஒரு அறையை தருமாறு அவரது பெற்றோரிடம் கேட்டுள்ளார். அது தர்க்கமாகியுள்ளது. அலறல் சத்தம் கேட்ட போதுதான் நான் ஓடிச் சென்றேன். கணவரின் அப்பாவும், கணவரின் சகோதரியின் கணவரும் கொட்டனால் அவரை அடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை நான் தள்ளிவிட்டேன். கணவரின் சகோதரி வந்து என்னை இழுத்துச் சென்று அறைக்குள் தள்ளி தாளிட்டு விட்டார்.
அதன்பின்னர் என்ன நடந்ததென்பதை நான் காணவில்லை. சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் வந்து கதவைத் திறந்துவிட்டதாக கூறினார். தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனை, ஹசலக பொலிசார் மீட்டு, ஹசலக மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் மகியங்கணை மருத்துவமனைக்கும் பின்னர் பதுளை பொது மருத்துவமனைக்கும் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
அதன்பின்னர் கணவர் இறந்துவிட்டதாக 8 ஆம் திகதி பொலிசாரிடமிருந்து தகவல் கிடைத்ததாக உயிரிழந்தவரின் மனைவி கூறினார். மேலும் உயரிழந்த இளைஞனின் சடலம் நேற்று கிராம மக்களால் இறுதி சடங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி பதாதைகள் வைக்கப்பட்டு, அமைதியான போராட்டமும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சொந்த மகனை குடும்பமே அடித்து கொலை செய்த நிலையில் இளம் மனைவி மற்றும் குழந்தைகள் நிர்க்கதியாக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.