கிராம உத்தியோகத்தர் கொலை வழக்கு – சந்தேகநபருக்கு பிணை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 22, 2021

கிராம உத்தியோகத்தர் கொலை வழக்கு – சந்தேகநபருக்கு பிணை!

 மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் இலுப்பைக் கடவை கிராம உத்தியோகத்தராகவும் கடமையாற்றிய எஸ்.விஜியேந்திரன் என்பவரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்னார் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ்.டினேஸன் தெரிவித்தார்.




அவர் மேலும் தெரிவிக்கையில்…


மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர் இன்று (22) மன்னார் மேல் நீதி மன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலும் இலுப்பைக் கடவை கிராம உத்தியோகத்தரின் கொலையுடன் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபர் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (22) குறித்த வழக்கு மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


எனினும் இதன் போது குறித்த சந்தேக நபர் குறித்து மன்னார் மேல் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஊடாக பிணை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


மேலும் குறித்த பிணை விண்ணப்பத்தின் கட்டளை இன்றைய தினம் (22) வழங்கப்பட்டதாக சட்டத்தரணி எஸ்.டினேஸன் குறிப்பிட்டுள்ளார்


குறித்த கட்டளையின் அடிப்படையில் சந்தேக நபர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை விதி விளக்கான காரணமாகக் கொண்டும், நாட்டில் அதிவேகமாக பரவி வருகின்ற கொரோனா தொற்றை மன்று தனது மேலான கருத்தில் கொண்டும் குறித்த சந்தேக நபரினை 25000 ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையிலும், இரண்டு சரீர பிணையிலும் செல்லவும், இருவரில் ஒருவர் மனு தாரராகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், மாதத்தில் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் இலுப்பைப்படவை பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணி முதல் 12 மணி வரையுமான நேரத்தில் கையொப்பமிட வேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையிலும் குறித்த சந்தேக நபர் மன்னார் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலும் வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபர் தொடர்பாக எவ்வித ஆதாரங்களையும் மன்றில் முன் வைக்கவில்லை.


இதனால் ஆதாரங்கள் எவற்றையும் நிரூபிக்க முடியாத காரணத்தால் சந்தேக நபர் நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக சட்டத்தரணி எஸ்.டினேஸன் மேலும் தெரிவித்தார்.