ஏழு மாதங்கள் விமான நிலையத்தில் வாழ்ந்த சிரிய நாட்டவருக்கு வாழ்வளித்த கனடா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 25, 2021

ஏழு மாதங்கள் விமான நிலையத்தில் வாழ்ந்த சிரிய நாட்டவருக்கு வாழ்வளித்த கனடா!

 ஏழு மாதங்கள் விமான நிலையம் ஒன்றில் வாழ்ந்த நிலையில் , யாரும் உதவிக்கு வராத நிலையில், தனக்கு வாழ்க்கை கொடுத்த கனடாவை நன்றியுடன் நினைவுகூர்கிறார் சிரிய நாட்டவரான Hassan Al Kontar .


The Terminal என்ற திரைப்படம் ஒன்றை பலரும் பார்த்திருக்கலாம். யுத்தத்தால் நாடற்ற நிலைமைக்கு வந்து, நாட்டுக்கு திரும்பிச் செல்லவும் வழியின்றி, அமெரிக்காவுக்குள் நுழைந்தால் கைது செய்யப்படலாம் என்பதால் விமான நிலையத்திலேயே வாழும் ஒருவரைப் பற்றிய அருமையான திரைப்படம் அது. அதே போன்ற ஒரு சம்பவம் தன் வாழ்வில் நடக்கும் என்று கொஞ்சமும் நினைத்திருக்கமாட்டார் Hassan Al Kontar.


சிரியாவைச் சேர்ந்த Hassan, ஐக்கிய அரபு அமீரகத்தில் சேல்ஸ்மேனாக வேலை செய்துகொண்டிருந்தார். அப்போதுதான் சிரியாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. அமீரகம் அவரது விசாவை புதுப்பிக்க மறுத்தது.



சிரியாவுக்குத் திரும்பினாலோ, அவர் கட்டாயமாக இராணுவத்தில் சேரவேண்டியிருக்கும். ஆக, நாட்டுக்கும் திரும்பமுடியாமல், சட்ட விரோதமாகவே அமீரகத்தில் தங்க, 2017இல் பிடிபட்டு, சிரிய பயணிகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்த நாடுகளில் ஒன்றான மலேசியாவுக்கு அனுப்பப்பட்டார் Hassan. மூன்று மாத சுற்றுலா விசாவில் தங்கி, வேலை செய்து தன் குடும்பத்தினர் இருக்கும் Ecuador நாட்டுக்குச் செல்ல டிக்கெட் வாங்க, அவரை விமானத்தில் ஏற்ற மறுத்துவிட்டார்கள். அதன்பின்னர் தன்னால் இனி எங்கும் செல்லமுடியாது என்பதை புரிந்துகொண்ட Hassan, அந்த விமான நிலையத்திலேயே தங்கி, தன்னிடமிருந்த மொபைலைக் கொண்டு உதவி கோரி ஒவ்வொரு நாடாக அழைக்க ஆரம்பித்தார்.


அந்த இக்கட்டான சூழலில் பல தொண்டு நிறுவனங்களை அழைத்தும், மன்னிக்கவும், உங்களை ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருக்கிறோம் என்ற பதிலே Hassan க்கு கிடைத்துள்ளது. உணவு இல்லாமல் பசியால் வாடிய Hassanக்கு அவ்வப்போது சிலர் பரிதாபப்பட்டு காபி வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அதை நினைவுகூரும்போது, அமிர்தம் போல் இருந்தது அந்த காபி என்று கூறுகிறார் Hassan.


இனி வேறு வழியே இல்லை, ட்விட்டரில் தன்னைப்பற்றிய விடயங்களை நேரலையில் ட்வீட் செய்யத்தொடங்கியுள்ளார் Hassan. அவரது கதை Tom Hanks நடித்த The Terminal திரைப்படத்தைப் போலிருந்ததால், வெளியுலகுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது.


இந்நிலையில் 2018ஆம் ஆண்டு, Hassanஇன் கதையைக் கேட்ட கனடாவில் உள்ள தன்னார்வலர்கள் சிலர், Laurie Cooper என்ற பெண்ணின் தலைமையில் Hassanக்காக போராடத் துவங்கியிருக்கிறார்கள். தன்னை Hassanஇன் கனேடிய அம்மா என்று அழைத்துக்கொள்ளும் Cooper, Hassanக்காக நிதி திரட்டி, அரசுடன் பேசி, அவருக்கு உணவுக்கும் அத்தியாவசிய பொருட்களுக்கும் ஏற்பாடு செய்து, Hassanஐ கனடாவுக்கு அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார்.


இதனையடுத்து தற்போது நிரந்தர வாழிட உரிமம் கொண்ட ஒருவராக Abbotsford என்ற இடத்தில் வாழ்ந்து வருகிறார் Hassan. தனக்கு எப்படி Cooper முதலானோர் உதவினார்களோ, அதேபோல் இப்போது மற்ற அகதிகளுக்கு உதவிவருகிறார் Hassan. கனடாவில் வந்து Cooperஇன் வீட்டில் அமர்ந்ததும், அவர்கள் கொடுத்த காபியுடன் வீட்டுக்கு வெளியே ஓடியதாகக் கூறும் Hassan, ஒரு குழந்தையைப் போல் உணர்ந்ததாகவும், தூங்காமல், வெப்பத்தைக் கொடுக்கும் மர அடுப்பின் அருகில் அமர்ந்துகொண்டு, கொட்டும் பனியையே பார்த்துக்கொண்டே காபியை சுவைத்துக்கொண்டு இருக்கலாம் என தனக்குத் தோன்றியதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.