பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு : நூலிழையில் தப்பிய பயணிகள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 14, 2021

பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு : நூலிழையில் தப்பிய பயணிகள்

 திருச்சியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று சென்றது.பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.பேருந்தை புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள பூனைக்குத்திப்பட்டியை சேர்ந்த வீரப்பன் என்பவரது மகன் ஆனந்த் (வயது 27) ஓட்டினார். விராலிமலை, எரங்குடி பிரிவு சாலை அருகே, பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்து ஓட்டுநர் ஆனந்துக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.



இதனால் பேருந்தை ஓட்ட முடியாமல் தடுமாறிய அவர், விபத்து ஏற்படாமல் பயணிகளைக் காப்பாற்றும் வகையில் நிறுத்த முயற்சித்தார். ஆனால், சிறிது நேரத்தில் பேருந்தை ஒட்டியவாறு மயங்கி விழுந்தார்.இதையடுத்து தாறுமாறாக ஓடிய பேருந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறுபுறத்தில் பள்ளத்தில் இறங்கி 100 மீட்டர் தூரம் சென்று அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது.


இது குறித்த தகவல் அறிந்ததும் காவல் நிலைய போலீசார் மணிகண்டன் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு பேருந்து ஓட்டுநரை அனுப்பி வைத்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


தொடர்ந்து, அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் உடற் கூராய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும்,பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்து விழுந்ததில், சிலருக்கு காயம் ஏற்பட்டது.


இதையடுத்து பயணிகளுக்கு முதலுதவி அளித்து, அனைவரும் மாற்று பேருந்து மூலம் புதுக்கோட்டைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பேருந்தை ஓட்டிச் சென்ற போது இளம் வயது ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, பேருந்தியலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், போக்குவரத்து மிகுந்த சாலையில் மற்ற வாகனங்களில் மோதாமல் நல்வாய்ப்பாக பெரும் விபத்தும் பயணிகளின் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.