இரவோடிரவாக இடிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறந்து வைப்பு – படங்கள் இணைப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 23, 2021

இரவோடிரவாக இடிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறந்து வைப்பு – படங்கள் இணைப்பு

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சிங்கள பேரினவாத அரசால் இரவோடிரவாக இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று மீண்டும் மீள் நிர்மானம் செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சற்று முன்னதாக பல்கலைக் கழக மாணவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது


யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8மஆம் தேதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.

மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு பல்கலை நிர்வாகம் முன்வந்தது.

இதையடுத்து கடந்த ஜனவரி 11 ஆம் திகதி அதிகாலை, யாழ். பல்கலைக் கழக உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.சிறிசற்குணராசா அவர்கள் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உப வேந்தரின் அனுமதிக்கு அமைய, அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து, மாணவர்களால் நினைவுத் தூபி கட்டுமானம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமாக மீள அமைக்கும் பணி நிறைவுக்கு வந்த நிலையில் இன்று காலை 7.00 மணியளவில் மாணவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதுப் பொழிவுடன் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளவாய்க்கால் நினைவு முற்றம் மாணவர்களால் திட்டமிட்டவாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நினைவு முற்றத்தில் நிறுவப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களால் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

யாழ். பல்கலைக் கழக உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.சிறிசற்குணராசா அவர்களால் திறந்து வைக்கப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், உப வேந்தருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.