தமிழரின் அவலக்குரலுக்கு சர்வதேச சமூகம் செவிசாய்க்க வேண்டும்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 18, 2021

தமிழரின் அவலக்குரலுக்கு சர்வதேச சமூகம் செவிசாய்க்க வேண்டும்!

 இலங்கை அரசாலும் அதன் படைகளாலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் எழுப்பும் அவலக்குரலுக்கு சர்வதேச சமூகம் செவிசாய்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்வதேசத்திடம் நீதி கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மக்கள் பேரணி முன்னெடுக்கப்பட்டது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் உணர்வெழுச்சிமிக்க அறவழிப் போராட்டங்களை நாம் மதிக்கின்றோம். சர்வதேச சமூகமும் இந்தப் போராட்டங்கள் தொடர்பில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டும்.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட பிரேரணை வரைபையும் நாம் வரவேற்கின்றோம்.

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கொண்டுள்ள கரிசனைகளையும் நாம் வரவேற்கின்றோம்.

பொறுப்புக்கூறல் கடமையிலிருந்து இலங்கை நழுவ முடியாத வகையில் ஐ.நா.உள்ளிட்ட சர்வதேச சமூகம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும் வரவேற்கின்றோம்.

எனவே, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேசம் தாமதமின்றி நீதியை வழங்கியே தீரவேண்டும்” – என்றார்