முல்லைத்தீவில் 40 இலட்சம் ரூபாவில் விகாரை கட்டும் முன்னாள் போராளி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, January 19, 2021

முல்லைத்தீவில் 40 இலட்சம் ரூபாவில் விகாரை கட்டும் முன்னாள் போராளி!

 விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் பௌத்த மதத்தை தழுவி, முல்லைத்தீவு எல்லைக்கிராமங்களில் பௌத்த மத கட்டுமானங்களிற்கு பல இலட்சம் ரூபாக்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.


தமிழ் தேசத்தை விட, சிங்கள தேசம் சிறந்தது என்றும் கூறியுள்ளார், தற்போது, வெலி ஓயா பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் 4 மில்லியன் ரூபா செலவில் தாதுகோபுரம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.


இந்த தகவல்களை சிங்கள ஊடகங்களும், சமூக ஊடகங்களும் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றன.

நமக்கு நல்லதொரு தமிழன் வாய்த்தான் என, சிங்கள சமூக ஊடகங்கள் அந்த நபரை புகழ்ந்து வருகின்றன.


முல்லைத்தீவை சேர்ந்த கிருபாகரன் (38) என்ற நபரே இவ்வாறு பௌத்தத்தை வளர்ப்பதில் குறியாக உள்ளதாக கூறப்படுகிறது.


யுத்தத்தில் காலொன்றை இழந்த அவர் இப்பொழுது ஒப்பந்தக்காரராக பணியாற்றி வருகிறார். இப்பொழுது பௌத்த மதத்தை தழுவியுள்ளார்.


முல்லைத்தீவு பகுதியில் பௌத்த விகாரைகளிற்காக பல இலட்சம் ரூபாவை அவர் செலவிட்டதாக கூறப்படுகிறது.


அந்த நபர் தனது கதையை சிங்கள ஊடகங்களிற்கு பகிர்ந்த போது-


என் அம்மா, அப்பா இருவரும் உயிருடன் இருக்கிறார்கள். அப்பா நகை தொழிலை நடத்தினார். எனவே எங்களிடம் நல்ல பணம் இருந்தது.


எனக்கு ஒரு மூத்த சகோதரர், இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி உள்ளனர். நான் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை.


ஒரு சகோதரி போரின்போது இறந்தார். நான் முல்லைத்தீவிலுள் வித்தியானந்தா மகா வித்தயாலயத்தில் படித்தேன்.


யுத்தத்தின் இறுதியில் ஒவ்வொரு குடும்பத்தலும் ஒருவர் தம்முடன் இணைய வேண்டுமென புலிகள் அறிவித்தனர்.


அல்லது வீட்டிற்கு வந்து ஒருவரை கடத்திச் செல்வார்கள். புலிகளின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, நான் புலிகளில் சேர்ந்தேன்.


நான் 10 ஆம் ஆண்டு வரை மட்டுமே படித்தேன். 2006 இல் நான் புலிகளில் சேர்ந்தேன். அப்போது எனக்கு 23 வயது. நான் கெரில்லா போரில் மூன்று மாத பயிற்சி பெற்றேன். எனது தகட்டு இலக்கம் 563. அமைப்பு எனக்கு ‘கார்முகிலன்’ என்ற பெயரை வைத்தது.


புலிகளின் முக்கிய தளபதியான கேணல் தீபனின் கீழ் செயற்பட்டேன், அங்கு எனக்கு கப்டன் தரம் வழங்கப்பட்டது.


முகமாலை முன்னரங்கத்தில் நடந்த மோதலில் எனது காலை இழந்தேன். நான்கு மாத சிகிச்சையின் பின்னர் வழங்கல் பகுதயில் பணியாற்றினேன்.


2009 ஏப்ரல் 5 அன்று வெள்ளமுள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் சரணடைந்தேன். எங்களுடன் வந்த போராளிகள் பொதுமக்களிற்குள் ஒளிந்து நின்று துப்பாக்கி பிரயோகம் செய்தது.


நாங்கள் முன்வரிசை போராளிகளாக இருந்த போதும், இராணுவம் எம்மை துன்புறுத்தவில்லை. எங்களை நன்றாக நடத்தினார்கள். பின்னர் புனர்வாழ்விற்கு அனுப்பினார்கள்.


அங்கே சிங்களத்தை நன்றாக பேசக் கற்றுக்கொண்டேன். நாங்கள் புலிகளில் இணைந்த பின்னர், சிங்கள நாடு ஒரு கொலைகார நாடு என்று தலைவர்கள் கற்பித்தனர். இது ஒரு அப்பட்டமான பொய் என்று பின்னர் உணர்ந்தேன்.


நம்முடையதை விட சிங்கள தேசம் சிறந்தது என்று நான் அச்சமின்றி சொல்கிறேன்.


பின்னர் நான் நாயாறு குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதலங்கார கிட்டி தேரருடன் தொடர்பு கொண்டேன். அவரிடமிருந்து தம்மத்தைப் பற்றிய புரிதல் எனக்குக் கிடைத்தது.


தமிழில் எழுதப்பட்ட ஒரு புத்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் எனது அறிவை மேலும் மேம்படுத்தினேன்.


ஒரு நாள் நான் அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசயாவில் வழிபடச் சென்றேன். அந்த நேரத்தில் என் மனதில் தோன்றிய முதல் எண்ணம் நான் பௌத்தத்தை படித்து, பௌத்தத்திற்கு மாற வேண்டும் என்பதாகும்.


இந்த காலகட்டத்தல் மேதலங்கார தேரர் காலமானார். அவரது உடலை விகாரைக்கு கொண்டு வர முடியாது, ஆலய சூழலில் தகனம் செய்ய முடியாது என தமிழ் தீவிரவாதிகள் குழு கலவரத்தில் ஈடுபட்டது.


மேதலங்கர தேரரின் நினைவாக, விகாரையில் ரூ.6 1/2 இலட்சம் செலவில் புத்தர் சிலை கட்டினேன். நீர் வசதிகள் செய்தேன்.


வெலிஓயா ஸ்ரீ தேவகிரி ராஜமஹா விகாரையில் ஒரு தாதுகோபம் கட்டும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த கட்டுமானத்திற்கு சுமார் ரூ .4 மில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


2019 ஆம் ஆண்டில், ருவன்வெலி மகா சாயாவின் இருப்பிடத்திற்கு சுமார் 3 1/2 லட்சம் ரூபாய் செலவிட்டேன். நான் நீண்ட காலமாக ஒவ்வொரு போயாவிற்கும் அனுராதபுரத்திற்கு வருகிறேன்.


அந்த சுதந்திரத்தை அனைத்து தேசிய இனங்களுக்கும் வழங்கிய மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோதபய ராஜபக்ஷ ஆகியோருக்கு ஒட்டுமொத்த தேசத்தின் கண்ணியமும் மரியாதையும் உண்டு.


புலிகள் அமைப்பில் முன்னணி வரிசை போராளிகளாக இருந்தபோதிலும், அவர்களால் எங்களுக்கு வாழ்க்கைப் பரிசு கிடைத்தது என புளகாங்கிதம் கொண்டுள்ளார்.


அவரது நிதியில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழிடங்களில் வழிபாட்டு சின்னங்கள் அகற்றப்பட்டு பௌத்த மயமாக்கல் நடப்பதை பற்றி, அவரும் பேசவில்லை. அவரிடம் பேட்டியடுத்த ஊடகமும் பேசவில்லை.