கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு PCR பரிசோதனை உபகரணம் ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளரிடம் இந்த உபகரணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உபகரணத்தின் பெறுமதி 5 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதுவரை PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில், சத்திர சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ள நோயாளர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள முன்னுரிமை வழங்கப்படும் என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளாந்த PCR பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தொற்று சிகிச்சை நிலையங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.