புரவி சூறாவளியின் தற்போது நிலைமை என்ன? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, December 3, 2020

புரவி சூறாவளியின் தற்போது நிலைமை என்ன?

 இலங்கைக்குள் ஊடுருவ புரவி சூறாவளி, மன்னார் வளை குடாவை நோக்கி படிப்படியாக நகர்ந்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதனால் எதிர்வரும் சில மணித்தியாலங்களுக்கு இலங்கையின் பல பகுதிகளில் கடும் காற்று மற்றும் மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதுடன், சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கொழும்பு முதல் புத்தளம், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலில் அலை 2 முதல் 3 மிற்றர் வரை உயரக்கூடும் எனவும், நிலப் பரப்பின் தாழ்நில பகுதிகளில் வெள்ள நீர் உட்புகும் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, புரவி சூறாவளி காரணமாக எந்தவித பாரிய சேதங்களும் ஏற்பட்டமை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.

மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்துள்ளமை தொடர்பிலேயே தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.அத்துடன், சில பகுதிகளில் மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் முறிந்து வீழ்ந்துள்ளதாக அறிய முடிகின்றது.

சில பகுதிகளில் ஓரளவு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எவ்வாறாயினும், குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு, நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் கடந்த 24 மணித்தியாலயத்தில் வவுனியா கனகராயன்குளம் பகுதியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரேவி” புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நேற்று முதல் காற்றுடன் கூடிய கன மழை பொழிந்து வருகின்றது,

இந்நிலையில் இன்று காலை 8 மணிவரையான 24 மணிநேரத்தில் அதிகபட்டசமாக கனகராயன்குளம் பகுதியில் 164 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நெடுங்கேணி பகுதியில் 140 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதுடன்,
செட்டிகுளம் பகுதியில் 101 மில்லிமீற்றரும், ஓமந்தை பகுதியில் 100 மில்லிமீற்றரும், வவுனியா நகர்ப்பகுதியில் 87.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பெய்து வரும் கன மழை காரணமாக அனேகமான குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதுடன் வவுனியா வடக்கில் அனைத்து குளங்களும் முழுகொள்ளவை எட்டியநிலையில் மேலதிக நீர் வெளியேறிவருவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தெரிவித்ததுடன், நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு குளம் முழு கொள்ளவை எட்டி மேலதிக நீர் குளத்தின் அணைக்கட்டு வழியாக வெளியேறுவதாக தெரிவித்தார். குறித்த குளத்தில் உடைவு ஏற்படாமல் இருக்க இராணுவத்துடன் இணைந்து பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு மன்னார் மாவட்டத்தில் புரவி புயல் காரணமாக இதுவரை 1008 மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 843 பேர் இதுவரை வரை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது