வவுனியாவில் சிவப்பு மஞ்சள் கொடிகளை அகற்றுவதற்காக பொலிஸார் முற்றுகை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, November 22, 2020

வவுனியாவில் சிவப்பு மஞ்சள் கொடிகளை அகற்றுவதற்காக பொலிஸார் முற்றுகை

வவுனியாவில் மாவீரர் வாரத்தினை முன்னிட்டு, சிவப்பு மஞ்சள்  கொடிகளை வர்த்தக நிலையம் ஒன்றின் முன்கட்டி அனுஸ்டிக்கப்பட்ட நிலையில், அதனை அகற்றுவதற்காக பொலிஸார் முற்றுகையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



குறித்த சம்பவம் தொடர்பாக  மேலும் தெரியவருவதாவது, “மாவீரர் வாரத்தினை அனுஸ்டிக்கும் முகமாக வவுனியா ஆலடி தோனிக்கல்லில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில், செ.அரவிந்தனால் சிவப்பு மஞ்சள் கொடி பறக்கவிடப்பட்டிருந்தது

இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை)மாலை 7.30 மணியளவில் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற வவுனியா பொலிஸாரினால் பறக்கவிடப்பட்ட கொடிகளினை அகற்றுமாறு தெரிவித்ததுடன், மாவீரர் தினம் அனுஸ்டிப்பு தொடர்பாக நீதிமன்றத்தின் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என தெரிவித்து குறித்த நபருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் நீதிமன்ற உத்தரவில், பொது வெளியில் எதுவும் செய்ய முடியாது என்றும் வீட்டிற்குள் இருந்து நினைவேந்தலைச் செய்யும் படியும் பொலிஸார் கோரியிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு பிரதி ஒன்றைக் காட்டி இதில் எங்கு அவ்வாறு கூறப்பட்டுள்ளது என குறித்த நபர் பொலிஸாரிடம் கேட்டார்.

இதனையடுத்து குறித்த பிரதி தமிழில் இருந்ததால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிரதி ஒன்றைக் கொண்டுவருகிறோம் என்று கூறிவிட்டு பொலிஸார் திரும்பிச்சென்றனர்.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த செ.அரவிந்தன், “கொடி கட்டியது தொடர்பாக பொலிஸார் வந்திருந்தனர். குறிப்பாக நீதிமன்ற கட்டளை சட்டத்திற்கு அமைவாகவே கொடிகளை கட்டியிருக்கிறேன்.

மேலும், மாவீரர் தின அனுஸ்டிப்பு அல்லது எங்களுடைய வீடுகளிலே வழிபடுவதற்கு உரிமை இருக்கின்றது என்பதை பொலிஸாருக்கு தெரிவித்திருந்தேன்” என குறிப்பிட்டார்.