நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 81 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 48,268 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 81,37,119 ஆக அதிகரித்தது.
அதே காலஅளவில், நாடு முழுவதும் 59,454 போ் தொற்றில் இருந்து குணமடைந்தனா். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 74,32,829 ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 91.34 சதவீதமாகும்.
கொரோனா தொற்றுக்கு மேலும் 551 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,20,641 ஆக அதிகரித்தது. உயிரிழப்பு விகிதம் 1.49 ஆக உள்ளது.
அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 43,837 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 11,140 பேரும், உத்தர பிரதேசத்தில் 7,007 பேரும், மேற்கு வங்கத்தில் 6,784 பேரும், ஆந்திரத்தில் 6,676 பேரும், தில்லியில் 6,470 பேரும், பஞ்சாபில் 4,187 பேரும், குஜராத்தில் 3,711 பேரும் உயிரிழந்தனா்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து 2 ஆவது நாளாக, 6 இலட்சத்துக்கும் கீழ் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 5,82,649 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 7.16 சதவீதமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.