மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா – Breaking News Updates - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, October 5, 2020

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா – Breaking News Updates

 

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 220 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதன் அடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாதை அடுத்து திவுலுபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதேவேளை குறித்த பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் சேவையாற்றியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் சேவையாற்றிய 101 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை நேற்றை தினம் இனங்காணப்பட்டிருந்தது.

நேற்று (05) கிடைத்த பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நேற்றை தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் மினுவங்கொட பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் திவுலபிட்டிய, மீரிகம, ஜாஎல, மஹர, சீதுவ மற்றும் கட்டான ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.

இதேவேளை விடுமுறையில் சென்றிருந்த குறித்த ஆடை தொழிற்சாலையில் சேவையாற்றிய குருணாகல் – கட்டுபொத்த, மொனராகல – மெதகம மற்றும் யாழ்ப்பாணம் – வேலணை ஆகிய பகுதியை சேர்ந்தவர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.

இதுவரையில் 2000 இற்கு அதிகமானவர்கள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மினுவங்கொட வைத்தியசாலை மற்றும் இரணவில கொவிட் சிகிச்சை மத்திய நிலையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்திற்கிடமான நோயாளர்களுக்கு பரிசோதனை நடத்த கம்பஹா வைத்தியசாலையை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.