இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை ரஷ்யாவிலிருந்து வந்த விமானத்திலுள்ள பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இவருடன் வந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குச் செல்லாமல் நேரடியாக மாத்தளை பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றவுடன் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது பாரதூரமான விடயம் கிடையாது. எனினும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
இதில் இராஜதந்திரிகளுக்கு அவர்களது சொந்த தங்குமிடங்களிலேயே தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து வரும் பெரும்பாலானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படுவதால் நாட்டில் வைரஸ் பரவும் அபாயம் குறைவடையவில்லை.
எனவே பொதுமக்களை அடிப்படை சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பணிப்பாளர் சுரங்க உபேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அமைய அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.