எனக்கு ஊழல் செய்ய தெரியாது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, September 24, 2020

எனக்கு ஊழல் செய்ய தெரியாது

 தனக்கு ஊழல் செய்ய தெரியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.



தனது முகப்புத்தகத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில், ‘எமது நல்லாட்சி அரசாங்கத்தை இன்னமும் கரித்து கொட்டும்  சிங்கள பேரினவாத முகநூலர்களின் பதிவுகளை அப்படியே காப்பியடித்து, எனது முகநூலுக்குள் உள்நுழைந்து, அவ்வப்போது மறுபதிவு செய்யும், ஒருசில “அறிவாளி” தமிழ் எழுதும் நண்பர்கள் ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.


நல்லாட்சி கால “மத்திய வங்கி பிணைமுறி” ஊழல் தொடர்பாக என்னிடம் கேள்வி எழுப்பி பிரயோஜனம் இல்லை.


ஏனெனில் நான் மனோ கணேசன். எனக்கு ஊழல் செய்ய தெரியாது. என் சொந்த நிதியில்தான் நான் மக்கள் அரசியல் பணியை கடந்த இருபது வருடங்களாக செய்கிறேன். இன்னமும் இயன்றவரை செய்வேன்.


ஆகவே, பிணைமுறி ஊழல் பற்றி ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அர்ஜுன மகேந்திரன், அலோசியஸ் கும்பலிடம் கேளுங்கள்.


சிங்கள அரசியல்வாதிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கவோ, பொறுப்பேற்கவோ முடியாது.


நல்லாட்சி அரசு என்பது ஒரு கூட்டணி அரசாங்கம்.  அதில் அங்கம் வகித்த தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், வெளியில் இருந்து ஆதரவளித்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இருந்த முன்னுரிமை (Priority) தேவைகள் வேறு என்பதை அறிவாளி நண்பர்கள் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.


நல்லாட்சியின்  ஐதேக உட்பட்ட சிங்கள அரசியல்வாதிகளின் முன்னுரிமைகள் வேறு.


எம்மை பொறுத்தவரை “மலையக தோட்டங்களில் 7 பேர்ச் காணி, சொந்த தனி வீடு, மலையக தமிழ் கிராமங்கள்,  வடகொழும்பில் சேரிபுறங்களை ஒழித்து கட்டப்பட்ட 13,000 தொடர்மாடி மனைகள், அங்கே, வெளிநபர்களை குடியேற்றாமல், அந்நிலத்து சேரிகளில் வாழ்ந்த ஏழை தமிழ், முஸ்லிம் மக்களையே குடியேற்றியமை, புதிய மலையக பிரதேச சபைகள், எமது பிரதேச சபைகள் தோட்ட புறங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் உரிமையை கபினட் தீர்மானம் மூலமாக உறுதிப்படுத்தியமை, மலையக அபிவிருத்தி அதிகார சபை, மலையக பாடசாலைகளுக்கு மேலதிக காணி”  என நீண்ட சாதனை பட்டியல் உண்டு.


வடகிழக்கில், நாம் “பதவியேற்ற போது இருந்த அரசியல் கைதிகள் தொகை சரிபாதியாக குறைந்தது, 60% க்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பு  காணிகள் விடுவிப்பு, வீடமைப்பு,  மரணித்தோரை நினைவுக்கூறும் உரிமை, கடத்தல், கொலை, கைதுகளற்ற சமாதான சூழல்” என்ற பட்டியல் உண்டு.


இவற்றுக்கு மேலதிகமாக எனது அமைச்சின் சமூக மேம்பாடு பிரிவு, தம்பி திகாவின் அமைச்சு, நிதி அமைச்சின் ஊரெழுச்சி (கம்பெரலிய) ஆகியவற்றின் ஒதுக்கீடுகள் மூலமான அபிவிருத்திகள்.


இன்னமும் ஆற்ற வேண்டிய பணிகள் கணிசமாக இருந்தாலும், கணிசமாக செய்துள்ளோம்.


இவற்றில் ஒரு 10 விகிதம் அல்ல, 5 விகித்தையாவது இப்போதைய செளபாக்கிய அரசாங்கத்தில் பதவி வகிக்கின்ற முழு, அரை, கால் தமிழ் அமைச்சர்களை செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம்..!


இப்படி ஆழமாக சிந்தித்து, இந்த பேரினவாதம் புரையோடி போயிருக்கின்ற ஸ்ரீலங்கா நாட்டின் “நடப்பு  வரலாற்றை” ஆய்ந்தறிய வேண்டும்.


எந்த அரசு வந்தாலும் ஆட்சியதிகாரத்தை  தம்வசம் கொண்டிருக்கும் சிங்கள முகநூல்  போராளிகளின் facebook பதிவுகளை காப்பியடித்து, அப்படியே இங்கே கொண்டு வந்து, ஒரே நேரத்தில், தமிழ் உலகெங்கும்  பல்லாயிரக்கணக்கான நண்பர்கள் பின்தொடரும் ( Follow, பகிரும் (Share), எனது முகநூல் தளம் மற்றும் பக்கத்தில் மறுபதிவு செய்து வாந்தியெடுக்க  கூடாது.’ எனப்பதிவிட்டுள்ளார்.