கண்டி, சங்கமித்த மாவத்தை, புவெலிகட பகுதியில் இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடத்திற்கு அருகில் வசிக்கும் குடும்பங்களை தற்காலிகமாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கட்டிடம் நிலையற்ற பரப்பில் அமைக்கப்பட்டதும், முறையான தரங்களை பின்பற்றி கட்டப்படவில்லையென்பதும் தெரிய வந்தது. இப்பகுதியில் கட்டிடம் அமைப்பதற்கான அறிவியல் நிலைமைகளுக்கு ஏற்ப கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
கட்டிடத்தின் அடித்தளம் தேவையான தரத்திற்கு கட்டப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டி மாவட்டத்தின் பொறுப்பாளர் புவியியலாளர் சமந்த போகாஹாபிட்டி, தேவையான தரத்திற்கு அடித்தளம் கட்டப்படாததால் அடித்தளம் இடிந்து விழுந்தது என்று கூறினார். இப்பகுதி இன்னும் ஆபத்தானதாக இருப்பதால் அருகிலுள்ள பல கட்டிடங்களில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு கூறப்பட்டதாக அவர் கூறினார்.
நேற்று காலை ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்தபோது, அது அருகிலுள்ள ஒரு சிறிய ஹோட்டலில் மோதியது. கொரோனா காலத்திலிருந்து எந்த சுற்றுலாப் பயணிகளும் ஹோட்டலில் தங்கவில்லை. ஹோட்டலை நடத்திய குடும்பத்தில் ஐந்து பேர் மட்டுமே உள்ளனர். இந்த விபத்தில் தாய், தந்தை மற்றும் குழந்தை கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பெண்கள் உயிர் தப்பியுள்ளனர். இறந்த ஒன்றரை வயது குழந்தையின் 32 வயது தாய் சட்டத்தரணி. அத்துடன், ஊவா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளருமாவார். அவரது கணவர் சாமில பன்னராசாத் (35) ஹோட்டல் உரிமையாளர்.
இடிந்து விழுந்த ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்த ஒரு குழு விபத்துக்கு முன்னர் அதிகாலையில் கட்டிடத்தை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை பொலிசார் இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளனர்.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததன் பின்னணியில் உள்ள காரணங்களைத் தீர்மானித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.