நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்தில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதேநேரம் பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்மித்த பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்நிலையில், கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது