மூன்று மாத குழந்தையை, பெற்றோரே ரூ. 1 லட்சத்துக்கு விற்று பைக் மற்றும் செல்போன் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த ஒரு தம்பதியருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை விரும்பாத தந்தை அப்போதே குழந்தையை விற்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தால் அவரது எண்ணம் கைகூடாமல் போனது. இந்நிலையில் வீடு திரும்பிய பிறகு, அவரது எண்ணத்தை அறிந்த நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அவரது உதவியுடன் மூன்று மாத குழந்தையை, அருகில் இருந்த கிராமத்தில் உள்ள தம்பதிக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்றுள்ளனர்.
குழந்தையை விற்ற அவர், கிடைத்த பணத்தில் ரூ.15,000க்கு செல்போனும், ரூ.50,000க்கு பைக்கும் வாங்கியுள்ளார். இதற்கு அவரது மனைவியும் உதவி செய்துள்ளார். குழந்தையை காணாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
தலைமறைவாகியுள்ள குழந்தையின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். தனது கணவரின் அச்சுறுத்தலால்தான் குழந்தையை விற்க ஒப்புக் கொண்டதாகவும், குழந்தையை தன்னிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.