ரிஷாட் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 7, 2020

ரிஷாட் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்?

?

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான பயங்கர்வாத நடவடிக்கைகள் தொடர்பில் தன்னை கைது செய்ய எடுக்கப்படும் முயற்சிகளுக்கு தடை விதிக்குமாறு கோரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

புவனேக அளுவிகாரே, எல். டீ. பி. தெஹிதெனிய மற்றும் எஸ். துரைராஜா உள்ளிட்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு வந்த போதே, அம்மனுவை விசாரணைக்கு ஏற்காமல் நிராகரிக்க நீதியரசர்கள் தீர்மானித்தனர்.

இன்றைய தினம் இந்த மனு பரிசீலனைக்கு வந்த போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணைப்பிரிவினால் நூற்றுக்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுவதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மெரின் புள்ளே தெரிவித்தார்.

மனுதாரரான முன்னாள் அமைச்சர் கைது செய்யப்படுவாராயின், அது அவருக்கு எதிரான சாட்சிகளை அடிப்படையாக வைத்து சட்டரீதியாக மாத்திரமே இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.

அதிகளவானவர்கள் காயமடைந்த, பலரது உயிர்கள் காவுகொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை சிக்கல் மிக்கதென சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் புள்ளே சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொருவராக தம்மை கைது செய்வதை தடுக்குமாறு இடைக்கால தடையுத்தரவு கோரி நீதிமன்றத்தை நாடுவது அடுத்த கட்ட விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் எனவும் அவர் மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இந் நிலையிலேயே சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த அடிப்படை ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் குழாம், ரிஷாட் பதியுதீனின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளிக்காமல் நிராகரித்தது.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின், விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 3 விசாரணை அறையின் பொறுப்பதிகாரி ரவீந்ர விமலசிரி, குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி, அதன் பணிப்பாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்க, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.