பொன்சேகாவிற்கு வாக்களிக்க கூறிய கூட்டமைப்பும், வாக்களித்த மக்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும்- ஆனந்த சங்கரி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 30, 2020

பொன்சேகாவிற்கு வாக்களிக்க கூறிய கூட்டமைப்பும், வாக்களித்த மக்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும்- ஆனந்த சங்கரி

விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக அழித்தவர் சரத் பொன்சேகா என்பது அவர் நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் வெளிப்படுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ் பிரதிநிதிகளுக்கு சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்தமை தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கு வாக்களிக்க கூறிய கூட்டமைப்பும், வாக்களித்த மக்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த விடயத்தை அன்று கூறியபோது தன்னை துரோகி என்று கூறினார்கள் ஆனால் தேசியம், சுயநிர்ணயம் பேசி தமிழ் இளைஞர்களை தவறாக வழிநடத்திய அமிர்தலிங்கம், பிரபாகரனிற்கு நேர்ந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும் என சரத் பொன்சேகாவே வெளிப்படையாக கூறிவிட்டார் என்றும் ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டினார்.

சரத் பொன்சேகாவின் கூற்றுப்படி அமரர் அமிர்தலிங்கத்தின் கொலையும் அன்றைய அரசினுடைய முழு ஒத்துழைப்போடு தான் நடந்தேறியதென்பதை மறைமுகமாக பொன்சேகா ஒத்துக்கொண்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் இணைந்த வடகிழக்கில் இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுத்துவிடுவார் என்ற பயத்தில், அவரை ஒழிக்க வேண்டுமென எண்ணிய அன்றைய அரசிற்கு ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்கள் என்று தங்களை கூறிக்கொண்டவர்கள், விலை போனார்கள் என்பது இன்று சரத் பொன்சேகாவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை உலகிலேயே முதல் தோன்றிய மொழியும் மூத்தகுடியும் தமிழும், தமிழர்களும் தான் என்பது உலகிலுள்ள அனைத்து இன மக்களிற்கும் தெரிந்த ஒரு விடயம் என்றும் இதனை விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்திற்கு சென்று தான் பேசி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.