மன்னார் பேசாலை பகுதியில் உலாவிய மர்ம நபரினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரைத் தேடி ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும், பொலிசாரும் மன்னாரில் விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
பேசாலை பகுதிக்கு நேற்று சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
குறித்த நபர் ஆலயத்திற்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியதை ஆலயத்தினுல் இருந்த பெண் ஒருவர் அவதானித்துள்ளார்.
குறித்த சந்தேக நபரிடம் குறித்த பெண் வினவிய போதும் அவருடைய பதில் குறித்த பெண்ணிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குறித்த பெண், ஆலயத்தின் உதவி பங்குத்தந்தையின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
உதவி பங்குத்தந்தை பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை கொடுதோர் அடிகளாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை 5.30 மணி யளவில் பேசாலை பங்குத்தந்தை பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
பேசாலை பொலிஸார், புனித வெற்றி நாயகி ஆலயத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்ததோடு ஆலயத்தில் பொருத்தப்பட்டு இருந்த சீ.சீ.ரீவி காணொலியை பார்வையிட்டுள்ளனர்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் தேவாலயத்திலிருந்து வெளியேறி, அருகிலுள்ள விடுதியொன்றிற்கு சென்றுள்ளார். அங்கு இரவு தங்குவதற்கு இடம் கேட்டுள்ளார்.
எனினும், அவர் புதியவர் மற்றும் விடுதியில் இடமில்லாத காரணங்களினால் விடுதியில் அவருக்கு இடம் வழங்கவில்லை.
இதையடுத்து விடுதியை விட்டு வெளியில் வந்தவர், சிறிதுநேரம் வீதியில் நின்றார். பின்னர் மாயமாகி விட்டார்.
இதனால் அப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.
இது தொடர்பாக பொலிசார், இராணுவம், புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவிரவாக இராணுவம், கடற்படை, புலனாய்வாளர்கள், பொலிசார் என ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு குவிக்கப்பட்டு, பேசாலை மற்றும் தலைமன்னார் பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்ப வழங்கப்பட்டுள்ளதுடன், சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன