வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய வவுனியா பெரியகட்டு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 164பேர் இன்றையதினம் விடுவிக்கப்பட்டனர்.
கொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது .
அந்தவகையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி அமெரிக்கா,
பிரித்தானியா, சிங்கப்பூர், பங்களாதேஸ் போன்ற நாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட பலர் வவுனியா பெரியகட்டு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்த நிலையில், இன்றையதினம் விடுவிக்கப்பட்டனர். அந்தவகையில் பெரியகட்டு முகாமிலிருந்து 92 பேரும், பம்பைமடு முகாமிலிருந்து 72 பேரும் என மொத்தம் 164 பேர் அவர்களது சொந்த இடங்களான புத்தளம், காலி,மாத்தறை, களுத்துறை போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் இன்று அனுப்பிவைக்கப்பட்டனர்.
குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.