2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் முடிவு நிர்ணயிக்கப்பட்டதென குற்றம்சாட்டப்பட்டுள்ள புதிய சர்ச்சை தொடர்பாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால வெளியிட்ட கருத்துக்கு மஹேல ஜயவர்தன பதிலடி கொடுத்துள்ளார்.
2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியை இந்தியாவுக்கு இலங்கை விற்றுவிட்டது என்ற அதிர்ச்சி தகவலை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ‘ஆட்ட நிர்ணயத்தில் வீரர்கள் சம்பத்தப்பட்டிராவிடின் அவர்கள் ஏன் கவலை அடைகின்றார்கள்? அவர்கள் அதில் சம்பந்தப்படாவிட்டால், அந்த அறிக்கை அவசிய முறைப்படி அணுகப்படும். அது குறித்து குழப்பமடைவதைவிட, டுவீட் பண்ணுவதைவிட அமைதிகாப்பது சிறந்தது. நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் அந்த தொப்பியை தலையில் போட்டுக்கொள்ளக்கூடாது’ – என்று சுமதிபால தெரிவித்திருந்தார்.
சுமதிபாலவின இந்தக் கருத்துக்கு தனது டுவிட்டரில் பதிலளித்துள்ள மஹேல ஜெயவர்தன, ‘மன்னிக்கவும், அவருக்கு இந்த விடயத்தில் நிறைய அனுபவம் இருப்பதால் அடுத்தமுறை பதிலளிப்பதற்கு முன்னரும் தொப்பியை தலையில் போட்டுக் கொள்வதற்கு முன்னரும் அவரிடம் நாங்கள் கேட்போம்’ – என குறிப்பிட்டுள்ளார்.