தம்பிகளா…ஆசனவாய் உள்ளதா… அடுத்த மரணத்திற்கு ஆள் ரெடி’: பேஸ்புக்கில் மிரட்டிய போலிஸ்காரர் பணிநீக்கம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 28, 2020

தம்பிகளா…ஆசனவாய் உள்ளதா… அடுத்த மரணத்திற்கு ஆள் ரெடி’: பேஸ்புக்கில் மிரட்டிய போலிஸ்காரர் பணிநீக்கம்

காவல்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக சென்னை ஆயுதப்படைக் காவலர் சதீஷ் முத்து என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.


சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு சர்ச்சை தேசிய அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்குதலில் உயிரிழந்ததாகச் சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இருவர் உயிரிழப்புக்குக் காரணமாகச் சொல்லப்படும் சாத்தான்குளம் காவல்நிலைய துணை ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கணேஷ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்றது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆய்வாளராகப் பணிபுரிந்த ஸ்ரீதரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.




இந்தநிலையில், சாத்தான்குளம் சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் அதை நியாயப்படுத்தும் வகையில் பதிவிட்ட சென்னை ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சதீஷ் முத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘டேய் தம்பிகளா, வாங்க அடுத்த லாக் அப் டெத்துக்கு ஆள் கிடைக்கலன்னு பார்த்தோம். ஆள் கிடைச்சிருச்சு. உங்களுக்கு ஆசனவாய் இருக்குதா தம்பிகளா?’ என்று நேற்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக புகார் எழுந்தநிலையில், அவரிடம் காவல்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது, தனது ஃபேஸ்புக் கணக்கு விவரங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவும் அவர்கள் இதுபோன்ற கமெண்டுகளைப் போட்டிருக்க வாய்ப்பிருப்பதாக சதீஷ் முத்து விளக்கமளித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆனால், கடந்த சில மணி நேரத்துக்கு முன், தனது ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக சதீஷ் முத்து பதிவிட்டிருந்ததும் சைபர் கிரைம் போலீஸார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதனால், அவரது பதிலும் ஃபேஸ்புக் பதிவும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தநிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவரை பணியிடைநீக்கம் செய்து சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டிருக்கிறார்.



இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ‘பொதுமக்களை போலீஸார் அடிப்பது மிகவும் தவறான செயல். மக்களை அடிப்பதும், துன்புறுத்துவதும் சட்டப்படி தவறு’ என்றார்.

மேலும், சென்னைக் காவல்துறையைப் பொறுத்தவரை கைது செய்து அழைத்து வரப்படுபவர்களின் மனது புண்படும்படி பேசுவதைக்கூட தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.