கொரோனா தொற்றால் விபரீத முடிவு: நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 25, 2020

கொரோனா தொற்றால் விபரீத முடிவு: நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை

கொரோனா தொற்று உறுதியானதால் நெல்லையில், ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பதி லட்டு, மணப்பாறை முறுக்கு வரிசையில், அல்வாவுக்கு பெயர் பெற்றது நெல்லை நகரம். தாமிரபரணி தண்ணீர் அல்வாவுக்கு சுவை கூட்டுவதாக சொல்லப்படுவது உண்டு.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு புகழ் பெற்ற ‘இருட்டுக்கடை அல்வா’ கடை உள்ளது. நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருட்டுக்கடை அல்வாவின் சுவைக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இதனால் மாலை நேரத்தில் கூட்டம் மொய்க்கும். பலர் இங்கிருந்து வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள உறவினர்களுக்கு அல்வா வாங்கி அனுப்புவது உண்டு.
இந்த கடையின் உரிமையாளர் ஹரிசிங் (வயது 80). இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவரது வீடு நெல்லை டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ளது.

கடந்த சில நாட்களாக நெல்லையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. 26 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. தினமும் ஏராளமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஹரிசிங்குக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை பெருமாள்புரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று காலை வெளியானது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதை அறிந்ததும் ஹரிசிங் அதிர்ச்சி அடைந்தார். தனக்கு வயதாகி விட்டதால் கொரோனா தன்னை அதிக அளவு பாதிக்கும் என்றும், ஒருவேளை குணம் அடைந்தாலும், கடைக்கு சென்று வியாபாரம் செய்ய முடியாது என்றும் நினைத்து கலங்கினார்.

இதனால் சோகமாக காணப்பட்ட ஹரிசிங் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். வார்டில் உள்ள ஜன்னலில் திடீரென்று வேட்டியை கட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுபற்றிய தகவல் அறிந்ததும், பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்ட ஹரிசிங்கின் மருமகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரும் நெல்லை டவுனில் இனிப்பு கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.